தமிழ்நாட்டில் நிலவும் வெப்ப அலை (Heat Wave) மற்றும் அதிக வெப்பநிலைச் சூழ்நிலைகளால் மாணவர்களின் உடல்நலன் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, பள்ளி மாணவர்களின் நலனை உறுதி செய்யப் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் பின்வரும் முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன.
📋 பாதுகாப்பு வழிகாட்டுதல்கள்:
அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களும், தங்களது மாவட்ட பேரிடர் வானிலை மேலாண்மை மையத்திடமிருந்து தங்கள் பள்ளி அமைந்துள்ள வட்டாரம்/கிராமம் குறித்த வானிலை சார்ந்த விவரங்களைத் தினமும் பெற்று அவர்களின் அறிவுரையின்படி செயல்பட வேண்டும். மேலும், வானிலை விவரங்களை எளிதில் பெற ஏதுவாக வட்ட பேரிடர் மேலாண்மை மையத்துடன் WhatsApp Group போன்ற செயலி மூலம் இணைப்பதற்குண்டான பணியினை முதன்மை கல்வி அலுவலர்கள் ஏற்படுத்த வேண்டும்.
அன்றாட வானிலை முன்னறிவிப்புகள், வெப்ப அலை எச்சரிக்கைகள் மற்றும் இதர வானிலை தொடர்பான அறிவிப்புகளைத் தவறாது அறிந்துகொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்திய வானிலை ஆய்வு மையத்தினால் கடுமையான வெப்ப அலை (Extreme Heat Wave) நிலை ஏற்படும் என முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டால், அதுகுறித்த தகவலை உடனடியாகப் பெற்று, மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை முன்னிறுத்தி தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
சூழ்நிலையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு இணங்க, அரசு விடுமுறை அறிவித்தல் உள்ளிட்ட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தலைமையாசிரியர்கள் தயார்நிலையில் இருக்க வேண்டும்.
பள்ளிகளில் மாணவர்களுக்குப் போதுமான குடிநீர் வசதி, நிழலான ஓய்விட வசதி, வெளிப்புற செயல்பாடுகளைத் தவிர்த்தல் (Avoiding Outdoor Activities) உள்ளிட்ட வெப்ப அலை தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
📌 முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான உத்தரவு:
அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் (CEOs) தங்கள் மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு மேற்கண்ட அறிவுறுத்தல்களை உடனடியாகத் தெரிவித்து, அவை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
0 Comments