CBSE பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் லக்னோ மாணவி 100 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று சாதனை

    CBSE பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் லக்னோ மாணவி 100 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். சிபிஎஸ்இ பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. மாணவர்கள் ஆர்வமாக தேர்வு முடிவுகளை பார்த்தனர். 38,000க்கும் அதிகமான மாணவர்கள் தலா 95 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்களையும், சுமார் 1.6 லட்சம் பேர் 90 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களை பெற்றுள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. அதில் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த மாணவி 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

    மாணவி திவ்யான்ஷி ஜெயின், 100% மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளார். அதாவது ஆங்கிலம், சமஸ்கிருதம், வரலாறு, பொருளாதாரம், புவியியல், இன்ஸ்யூரன்ஸ் ஆகிய 6 தேர்வுகளிலும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக மாணவி தெரிவித்துள்ளார். தினமும் பெரும்பாலான நேரங்களை படிப்பதற்கே செலவிட்டதாக அவர் கூறியுள்ளார். தான் இந்த நிலையை அடைந்ததற்கு பெற்றோர் மற்றும் ஆசியர்களின் ஒத்துழைப்பு மற்றும் ஊக்கமே காரணம் என நன்றி தெரிவித்துள்ளார்.

   கல்லூரியில் வரலாறு பிரிவில் சேருவதே தனது விருப்பம் என தெரிவித்துள்ளார். வரலாற்றில் அதிக ஆர்வம் இருப்பதாகவும், அதுதொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபடவிருப்பதாகவும் கூறியுள்ளார். நம் நாட்டின் கடந்த காலம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருப்பதால், வரலாறை தேர்வு செய்வதாக குறிப்பிட்டுள்ளார். கடுமையாக உழைத்து கடினமாக தேர்வுகளிலும் சிறப்பான வெற்றி பெற்ற மாணவி திவ்யான்ஷி ஜெயினுக்கு பலரும் தங்கள் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments