முதுகலை ஆசிரியர் பணியிடங்களை இந்த மாத இறுதிக்குள் நிரப்ப கல்வித்துறை முடிவு

     வேலூர்: அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர்  பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை நியமிக்கும் பணி இந்த மாத இறுதிக்குள் முடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் வகையில் ஆசிரியர் பணித்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.


      கடந்த செப்டம்பர் மாதம் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக இருந்த 2 ஆயிரத்து 145 முதுகலை மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கான தேர்வு நடந்தது. இதில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் சரிபார்ப்புப்பணிகள் முடிந்து, அதற்கான பட்டியலும் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. தேர்ச்சி பட்டியல் வெளியாகி 3 மாதங்கள் கடந்த நிலையில் இன்னமும் பட்டியலில் இடம்பெற்ற முதுகலை மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதனால் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதுகலை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். அதோடு காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் பொதுத்தேர்வு நெருங்கும் நிலையில் மாணவர்களின் கல்வி நலனும் பாதிக்கப்படுவதாக மாநிலம் முழுதும் அதிருப்தி குரல் எழுந்துள்ளது.


    இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, 'தேர்வில் தேர்ச்சிபெற்ற முதுகலை மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் விரைவில் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள். உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை 2ம் தேதி நடக்க உள்ள நிலையில், அப்பணிகள் முடிந்து நிதித்துறை செயலாளரின் ஒப்புதல் பெறப்பட்டு பள்ளிகளில் பணி நியமனம் இம்மாதத்துக்குள் நடைபெறும்' என்றனர்.





Post a Comment

0 Comments