ஒவ்வொரு ஆண்டும் செப். 5-ம் தேதி ஆசிரியர் தினத்தையொட்டி அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. தொடக்கத்தில் ஆசிரியர்களின் திறன், மாணவர்களின் தேர்ச்சி, பாடப்பிரிவில் மேற்கொள்ளும் மதிப்பெண் போன்ற காரணிகளை மையப்படுத்தி இவ்விருது வழங்கப்பட்டு வந்தது.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நல்லாசிரியர் விருது தகுதியின் அடிப்படையில் இல்லாமல், அரசியல் பின்புலம் மற்றும் அந்தந்த பகுதி எம்எல்ஏ, எம்.பி மற்றும் ஆளும்கட்சி நிர்வாகிகளின் பரிந்துரையின்பேரில் வழங்கப்படுவதாகக் கூறி பல ஆசிரியர்கள் விண்ணப்பிப்பதைத் தவிர்த்து வந்தனர். இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால், இந்தமுறை தகுதியானவர்களுக்கு கிடைக்கும் என்ற நோக்கத்தில் கடலூர் மாவட்டத்தில் 42 ஆசிரியர்களும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 26 ஆசிரியர்களும் விண்ணப்பித்துள்ளனர்.
📌 முக்கிய குற்றச்சாட்டுகள் & விளக்கங்கள்:
💰 கடலூர் மாவட்ட நிலவரம்
விருதுக்குப் பரிந்துரைக்க தவெக நிர்வாகிகள் சிலர் ஆசிரியர்களிடம் பேரம் பேசி வருவதாகவும், அமைச்சர் ராஜ்குமாரிடம் கூறி பரிந்துரைக்க லட்சம் ரூபாய் வரை செலவாகும் எனக் கூறுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
🏛️ கள்ளக்குறிச்சி மாவட்டம்
பொறுப்பு அமைச்சர் வன்னி அரசு பெயரைக் கூறி, அவர் மூலமாக பரிந்துரை கடிதம் பெற்றுத் தரப்படும் என விசிக மற்றும் தவெக நிர்வாகிகள் பேரம் பேசி வருவதாக ஆசிரியர்கள் தரப்பில் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.
🗣️ சங்க நிர்வாகி கருத்து
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆசிரியர் சங்க கூட்டமைப்பு நிர்வாகி சூரியகுமார் கூறுகையில், "இந்த முறையும் தகுதியானவர்களுக்கு விருது கிடைக்காத சூழல் தான் உள்ளது; விண்ணப்பிக்கும் கால அவகாசமும் குறைக்கப்பட்டுள்ளது" என்றார்.
⚖️ மறுப்பு மற்றும் விளக்கம்
தியாகதுருகம் தவெக ஒன்றிய செயலாளர் விஜய் செந்தில் மற்றும் அமைச்சர் ராஜ்குமார் ஆகியோர் தாங்கள் யாருக்கும் பரிந்துரைக்கவில்லை எனவும், கட்சியினர் இதில் ஈடுபட மாட்டார்கள் எனவும் விளக்கமளித்துள்ளனர்.
0 Comments