பள்ளிகளில்
விரைவில் ‘உடற்கல்வி பிரிவு’ என்ற புதிய பாட திட்டம்
மாணவர்கள் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்க புதிதாக ‘உடற்கல்வி
பிரிவு’ என்ற புதிய பாடத்திட்டத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக
பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்தார்.
மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நேற்று பள்ளிக்கல்வித் துறை சார்பில்
10, பிளஸ் 2 வகுப்பு தேர்வு முடிவுகள் பகுப்பாய்வு மற்றும் சிறப்பு வழிகாட்டு
நெறிமுறைகள் கூட்டம், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் எஸ்.தயாளன்
தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்
எஸ்.கண்ணப்பன் பேசியதாவது:
தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் 1, 2, 3-ம் வகுப்பு
மாணவர்களுக்கு சில மாற்றங்களுடன் பாட நூல்கள், பயிற்சிப் புத்தகம்
இரண்டையும் இணைத்து புதிய பாட நூல்கள் வழங்கப்படுகின்றன. குழந்தைகள்
மகிழ்ச்சியாக கற்றுக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் அடுத்தாண்டில் 4 முதல் 8 வகுப்புக்கும், அடுத்து 9 முதல்
பிளஸ் 2 வரை பாடத் திட்டம் மாற்றி வடிவமைக்கப்பட உள்ளது. தலைமை
ஆசிரியர்களுக்குத்தான் தலைமைப்பண்பு இருக்கிறது. பள்ளிகளில்
ஆசிரியர்களின் பிரச்சினைகள், மாணவர்களின் பிரச்சினைகளை நெகிழ்வுத்
தன்மையோடு சமநிலைப்படுத்தி வழி நடத்தினாலே பள்ளிகள் சாதனைப் பள்ளிகளாக
மாறும்.
ஆசிரியர்கள் மாணவர்களிடையே விளையாட்டில் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும்.
விளையாட்டில் ஆர்வமுடைய மாணவர்கள் படிப்பில் தொய்வு இருக்கும்.
அம்மாணவர்களை மட்டம் தட்டாமல் ஊக்கப்படுத்த வேண்டும். மாணவர்கள்
விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்க ‘உடற்கல்வி பிரிவு’ (Physical
Education Group) என்ற புதிய பாடத் திட்டத்தை உருவாக்கத்
திட்டமிட்டுள்ளோம். மாணவர்களின் தனித்திறன்களை கண்டறிந்து வெளிக்கொணர
வேண்டும். ஆசிரியர்கள் தூண்டுகோலாக இருந்தாலே போதும். பெற்றோர் எந்தக்
குழந்தையையும் ஒப்பிடக் கூடாது. இவ்வாறு பேசினார்.
0 Comments