Complete TNTET Paper I Syllabus: Language I - Tamil (Classes 6-8) | தமிழ் பாடத்திட்டம்

 




TNTET Syllabus - Language Tamil (Classes 1 - 5)

TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET)

II. Language - Tamil / தமிழ் (Classes 1 - 5)

பாடத்திட்டம் - தொடக்க வகுப்புகள் (1-5)
(Telugu / Malayalam / Kannada / Urdu - Same pattern)

மொழித்திறன்கள் மற்றும் தகுதிகள்

1. கேட்டல்

முதல் வகுப்பு:

அறிமுகமான ஓசைநயமும் கருத்தும் சொற்களமைந்த, எளிய, ஓசை நயமிக்க பாடல்களைக் கேட்டுப் புரிந்து கொள்ளுதல் / சுவைத்தல். எளிய படக்கதைகளைப் பார்த்தும் கவனத்துடன் சொல்லக் கேட்டும் புரிந்து கொள்ளுதல்/ சுவைத்தல். எளிய கட்டளைகள், அறிவுரைகளைக் கேட்டுப் புரிந்து கொண்டு அதற்கேற்பச் செயல்படுதல்.

இரண்டாம் வகுப்பு:

ஓவியங்கள் / படங்கள் / கதைப்படங்களை உற்று நுட்பமுடன் நோக்கல்/ சுவைத்தல். எளிய, கேட்டறியாத சொற்களமைந்த பாடல்களைக் கவனத்துடன் கருத்தூன்றிக் கேட்டுப் புரிந்து கொள்ளுதல். அவற்றின் மீதான கருத்தினை/ நோக்கினை வெளிப்படுத்துதல். எளிய சிந்தனையைத் தூண்டும் கதைகளைக் கவனத்துடன் கருத்தூன்றிக் கேட்டுப் புரிந்து கொள்ளுதல். வாய்மொழி வேண்டுகோள்களையும் அறிவுரைகளையும் கட்டளைகளையும் வினாக்களையும் கேட்டுப் புரிந்து கொள்ளுதல்/ எதிர்வினையாற்றுதல். ஒத்த வயதினரின் உரையாடல்களையும் எளிய தகவல்களையும் கேட்டுப் புரிந்து கொள்ளுதல்.

மூன்றாம் வகுப்பு:

கேட்டறியாத, எளிய சொற்களமைந்த பாடல்களையும், கதைகளையும் கவனத்துடன் கருத்தூன்றிக் கேட்டுப் புரிந்து கொள்ளுதல். தம்மைச்சுற்றி நடைபெறும் உரையாடல்களையும் விவரிப்புகளையும் கேட்டுப் புரிந்து கொள்ளுதல். வாய்மொழியிலான புதிர்கள், வருணனைகள், சொல் விளையாட்டு விதிமுறைகள் ஆகியவற்றைக் கேட்டுப் புரிந்து கொள்ளுதல். பிறர் பேசுவதைப் பொறுப்புடனும் கவனத்துடனும் கேட்டுப் புரிந்துகொள்ளுதல்.

நான்காம் வகுப்பு:

ஓசைநயமும் கருத்தும் மிக்க பாடல்கள், புதிர்க் கதைகளைக் கேட்டுப்புரிந்து கொள்ளுதல். எளிய உரைகளைக் கேட்டுப் புரிந்து கொள்ளுதல். சூழ்நிலையில் தாம் உற்றுக்கேட்ட பல்வேறு விவரங்களைப் புரிந்து கொண்டு வெளிப்படுத்துதல். தொடர் வாய்மொழிக் கூற்றுகளையும் விடுகதைகளையும் கேட்டுப் புரிந்து கொள்ளுதல். வானொலி தொலைக்காட்சி செய்திகளைக் கேட்டுப் புரிந்து கொள்ளுதல்.

ஐந்தாம் வகுப்பு:

விழிப்புணர்வுப் பாடல்கள், சிந்தனையைத் தூண்டும் கதைகளைக் கேட்டுப்புரிந்து கொள்ளுதல். நாடகம், வசனங்கள் உரைகள் முதலியவற்றைக் கேட்டுப் புரிந்துகொள்ளுதல். சொற்போர், கலந்துரையாடல் ஆகியவற்றைக் கேட்டுப்புரிந்து கொள்ளுதல். பிறர் கூறுவதைக் கவனமுடன் கேட்டல்/ வினாக்கள் எழுப்புதல் அவற்றின் மீதான தங்கள் கருத்துகளை/எதிர் வினைகளை வெளிப்படுத்துதல். எளிய செயல்திட்டங்களைக் கேட்டுப் புரிந்து செயல்படுதல்.

2. பேசுதல் (மற்றும் கருத்தாடல்)

முதல் வகுப்பு:

தன் பெயர், குடும்பத்தினர் பெயர், ஊர்ப்பெயர், நண்பர்களின் பெயர்களைக் கூறுதல். எளிய, சந்தநயமுள்ள பாடல்களை உடல் அசைவுகளுடன் குழுவாகவும், தனியாகவும் பாடுதல்/ ஒப்பித்தல். பாடல், கதை, படக்கதை ஆகியவற்றை பார்த்து அதுகுறித்து உரையாடுதல், கதை கூறுதல். விவரங்கள் அறிய வினா எழுப்புதல். கேட்டறிந்தவற்றைப் பேச்சில் வெளிப்படுத்துதல். தம்முடைய எண்ணங்களையும் தேவைகளையும் வெளிப்படுத்துதல்/ அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுதல். ஒத்த வயதினருடன், ஆசிரியர்களுடன் தன்னைச் சுற்றியுள்ளவை பற்றி உரையாடுதல்.

இரண்டாம் வகுப்பு:

ஓசைநயமிக்க பாடல்களைத் தனியாகவும் குழுவாகவும் உரிய ஒலிப்புடன் பாடுதல். படக் கதையைப் பார்த்து நிகழ்வைக் கூறுதல். செய்தி திரட்டும்பொருட்டு வினா எழுப்புதல். பார்த்த/ கேட்டவற்றைப் பற்றிப் பேசுதல். படத்தைப் பார்த்துப் பேசுதல். கேட்கப்படும் எளிய வினாக்களுக்கு முழுமையான சொற்றொடரில் விடை கூறுதல். சொற்கள், தொடர்களை முறையாகவும் சரியாகவும் ஒலித்தல். கேட்ட கதை, பாடல்களைத் தம் கற்பனையின் அடிப்படையில் கூறுதல்/ பேசுதல். கேட்டவற்றுடன் தம் அனுபவங்களைத் தொடர்புபடுத்திப் பொருள் விளங்கும்வகையில் தெளிவாக வெளிப்படுத்துதல்/ வினா எழுப்புதல்.

மூன்றாம் வகுப்பு:

அறிந்த, கேட்ட கதைகள், தகவல்களைக் கலவை நடையில், சொந்த நடையில் கூறுதல். பாடல்களை இசையுடன் உரிய உணர்ச்சியுடன் பாடுதல். கேட்டுணர்ந்த கதை, கதைப்பாடல்களின் தலைப்புகள், கதாமாந்தர்கள் பற்றி வினாக்கள் கேட்டல், இனங்காணுதல், கருத்தாடல் செய்து சொல்லுதல், கருத்துகளை வெளிப்படுத்துதல். கேட்ட/ படித்த பாடல், கதைகளிலிருந்து கேட்கப்படும் வினாக்களுக்கு சரியான ஒலிப்புடனும், தங்கு தடையின்றியும் விவரித்துக் கூறுதல். கேட்கும்/ படிக்கும் கதை, கவிதை/ செய்திகள் ஆகியவற்றைப் புரிந்துகொண்டு தங்கள் கருத்துகளால் வளப்படுத்துதல். பண்புடன் உரையாடுதல்.

நான்காம் வகுப்பு:

தங்குதடையின்றி இயல்பாகத் தொடர்ந்து பேசுதல். எளிய வருணனைச் சொற்களைக் கலந்து பேசுதல். தெளிவாகப் பொருள் விளங்க ஒப்பித்தல். கதைகள், பாடல்களைத் தங்கள் விரும்பும் வகையில் சொந்த நடையில் கூறுதல். விடுகதைகளுக்கு விடை கூறுதல். தமக்கு அறிமுகமான, பல்வேறு துறை சார்ந்த தலைப்புகள், சூழல், கதைமாந்தர்கள் குறித்துப் பேசுதல், தனிப்பட்ட கருத்துகளை வெளிப்படுத்துதல். எளிய வகுப்பறைக் கருத்தாடல், கலந்துரையாடலில் பங்கேற்றல். தேசிய மாநில அளவிலான, சமூக, உணர்வுபூர்வமான செய்திகளை இனங்கண்டு அவற்றின்மீது கருத்தாடல் செய்தல்.

ஐந்தாம் வகுப்பு:

பல்வேறு பாடல்களைப் பொருளுணர்ந்து பாடுதல். அறிந்த, எளிய தலைப்புகளில் இயல்பாகவும் சரளமாகவும் பேசுதல். கேட்ட, படித்த பல்வேறு இலக்கியங்கள்பற்றிப் விவாதித்தல், பேசுதல், பகுப்பாய்வு செய்தல். தம் கருத்துகளையும் இணைத்துச் சொல்லுதல். தன்னைச்சுற்றி நிகழும் பல்வேறு நிகழ்வுகளுக்கு எதிர்வினை புரிதல். சூழ்நிலைகளையும் நிகழ்வுகளையும் விவரித்தல். படித்த, கேட்ட கருத்துகள் பற்றிக் கருத்தாடல் செய்யவும் வினாக்கள் எழுப்பவும் தம் கருத்துக்கு/ நோக்கத்திற்கு ஆதரவாகவும் விளக்கமளித்தல். நாடகங்கள், சொற்போர் முதலான நிகழ்வுகளில் பங்கேற்றுப் பேசுதல். மொழியின் நுட்பமான கூறுகளை மனத்திற்கொண்டு தங்களுக்கேயுரிய மொழிநடையைக் கட்டமைத்தல்.

3. படித்தல் (படிப்பதற்கான ஆயத்தச் செயல்கள்)

முதல் வகுப்பு:

படங்களை நுட்பமாக நோக்குதல். உற்று அளவு, வண்ணம், வடிவம் ஆகியவற்றிற்கிடையே உள்ள ஒற்றுமை, வேற்றுமைகளை அறிதல். படங்களை இடமிருந்து வலம் நோக்கிப் பார்த்துப் பெயர் சொல்லுதல். அச்சிடப்பட்ட பகுதிகளை உற்று நோக்கி, அப்பகுதி வெளிப்படுத்தும் கருத்தை அனுமானம் செய்தல். தமிழ் எழுத்துகளை இனங்கண்டு (ஒலி வடிவ, வரி வடிவத் தொடர்புகளை அறிந்து) முறையாக ஒலிப்புடன் படிக்க அறிதல் (உயிர், மெய், உயிர்மெய், ஆய்த எழுத்துகள்). எழுத்துகளைத் தனியாகவும் சொற்களிலும் அடையாளம் காணுதல். நான்கு எழுத்துக்களுக்கு மிகாத சொற்களைச் சேர்த்துப் படித்தல். சிறு சிறு தொடர்களைப் படித்தல். குறில் நெடில், மயங்கொலிப் பிழைகளின்றிப் படித்தல். சொற்கள் ஒலிகளைக் கொண்டு விளையாடி மகிழ்தல். எளிய படக்கதைகளைப் படித்தல்.

இரண்டாம் வகுப்பு:

தமிழ் மொழியின் அனைத்து எழுத்துகளின் ஒலிவடிவ, வரிவடிவத் தொடர்புகளை இனங்கண்டு முறையாக உச்சரித்தல். எளிய சொற்கள், சிறு சிறு தொடர்களை உரிய ஒலிப்புடன் உரக்கப் படித்தல். வடமொழி ஒலிப்புகளுக்குரிய, கிரந்த வரிவடிவங்களை அறிந்து படித்தல். எளிய சந்தப் பாடல்களை இசையுடன் பாடுதல். எளிமையான சிறுசிறு படக்கதைகளைப் பாடல்களைப் படித்தல். படிக்கும் பகுதியின் பொருளுணர்ந்து வினாக்களுக்கு விடையளித்தல். தாங்கள் விரும்பும் நூல்களைத் தேடிப் படித்தல். படித்த பகுதியில் கேட்கப்படும் சிறு சிறு வினாக்களுக்கு விடையளித்தல்.

மூன்றாம் வகுப்பு:

தெளிவான ஒலிப்புடன் நெடில், குறில் மயங்கொலிப் பிழைகளின்றிப் படித்தல். எளிய தொடர்களைத் தங்குதடையின்றிப் படித்தல். முற்றுப் புள்ளி, வினாக் குறி ஆகிய நிறுத்தக்குறியீடுகளை அறிந்து படித்தல். மூன்று (அ) நான்கு தொடர்களைக் கொண்ட சிறுசிறு உரைப்பகுதிகளைப் படித்து வினாக்களுக்கு விடையளித்தல். சூழல் சார்ந்து புதிய சொற்களின் பொருள் புரிந்து படித்தல். படிக்கும் பகுதியில் இடம்பெறும் புதிய சொற்களைச் சூழல் அடிப்படையில் புரிந்துகொண்டு அவற்றின் சரியான பொருளை அறிந்துகொள்ள முயலுதல். பெயர்ச் சொல், வினைச் சொல், பதிலிப் பெயர்ச்சொல் போன்ற நுட்பங்களைப் புரிந்துகொள்ள இயலுதல்.

நான்காம் வகுப்பு:

சிறு சிறு உரைப்பகுதிகளை நிறுத்தக்குறிகளுக்கு ஏற்பப் படித்தல். சிறு சிறு கதைகள், பாடல்களை உரிய ஒலிப்புடன் பொருள் விளங்கப் படித்தல். படிக்கும் பகுதியில் இடம்பெறும் பழமொழிகள், மரபுச் சொற்களை அறிதல். செய்தித்தாள்கள், சுவரொட்டிகள், அறிவிப்புகள், விளம்பரங்கள் ஆகியவற்றைப் படித்துப் புரிந்துகொள்ளுதல். படித்து உணர்ந்தவற்றோடு தங்கள் அனுபவங்களையும் தொடர்புபடுத்துதல். உரைப்பகுதிகளைப் படித்து வினாக்களுக்கு விடையளித்தல். ஒரே பொருண்மையுள்ள பல்வேறு சொற்களுக்கு இடையிலான நுட்பமான வேறுபாடுகளை அறிந்து பயன்படுத்துதல்.

ஐந்தாம் வகுப்பு:

செய்தி, நிகழ்ச்சி அறிவிப்புகள், நிகழ்ச்சிநிரல், அழைப்பிதழ்கள், துண்டறிக்கை/ வெளியீடுகள் ஆகியவற்றைப் படித்துப் பொருளுணர்தல். கதை, உரையாடல், கடிதம், நாடகம் ஆகியவற்றை உரிய உணர்ச்சியுடனும், குரல் ஏற்றஇறக்கத்துடனும் பொருளுணர்ந்து விளங்குமாறு படித்தல். படித்து உரைப்பகுதிகளைப் அதிலிருந்து கேட்கப்படும் பல்வேறு வகையான வினாக்களுக்கு விடையளித்தல். எளிய பட விளக்கங்கள், அறிவிப்புகள், எண் விவர வரைபடங்கள் ஆகியவற்றைப் படித்து பொருள் உணர்தல். சொற்களின் பொருண்மையை அகரமுதலிகளில் கண்டறிதல். செய்தித்தாள்கள், கதை நூல்கள் ஆகியவற்றைப் படித்தல். பல்வேறு துறை சார்ந்த சொற்களைப் புரிந்துகொண்டு பொருத்தமான இடங்களில் பயன்படுத்துதல்.

4. எழுதுதல்

முதல் வகுப்பு:

முன் ஆயத்தப் பயிற்சி: தன் விருப்பம்போல் கிறுக்குதல். நேர்க்கோடு, வளைகோடு, சாய்கோடுகளை வரைதல். புள்ளிகளை இணைத்து நேர்க்கோடுகள், வளைகோடுகள் வரைதல். உயிர், மெய், உயிர்மெய், ஆய்த எழுத்துக்களின் ஒலி வடிவ, வரி வடிவத் தொடர்புகளை அறிந்து எழுதுதல். சொல்லிக்கொண்டே வரியொற்றி எழுதுதல். சொற்களையும் சிறு சிறு தொடர்களையும் பார்த்து உச்சரித்துக்கொண்டே எழுதுதல். இரண்டு அல்லது மூன்று எழுத்துச் சொற்களைச் சொல்லக் கேட்டு, குறில் நெடில், மயங்கொலிப் பிழையின்றி எழுதுதல்.

இரண்டாம் வகுப்பு:

படங்களைப் பார்த்துப் பெயர்கள், சிறுசிறு தொடர்கள் (தெளிவாகவும் வரிவடிவம் சிதையாமலும்) எழுதுதல். சொற்கள், சிறுசிறு தொடர்களைச் சொல்லக் கேட்டு எழுதுதல். வடமொழி ஒலிப்புகளுக்குரிய, கிரந்த எழுத்துகளை எழுதுதல். கேட்கப்படும் வினாக்களுக்கு விடை எழுதுதல். எளிய பாடல், கதை, உரைப்பகுதியிலிருந்து கேட்கப்படும் வினாக்களுக்கு முழுமையான தொடர்களில் விடையளித்தல். சிறு சிறு தொடர்களைத் தம்முடைய நடையில் எழுதுதல். கேட்டவற்றை / படித்தவற்றை / சிந்தித்து உணர்ந்தவற்றைப் படங்களாகவோ, சொற்களாகவோ, தொடர்களாகவோ வெளிப்படுத்துதல். புதிய சொற்களில் (பேச்சில் / எழுத்தில்) பயன்படுத்துதல்.

மூன்றாம் வகுப்பு:

உரிய வரிவடிவத்தில், முறையான இடைவெளியிட்டு எழுதுதல். செய்தி / கதை / உரைப்பகுதி / இதழ் ஆகியவற்றைப் படித்துப் பொருள் உணர்ந்து கருத்து தெரிவித்தல். தமக்கான நடையில் எழுதுதல். புதிர்கள், துணுக்குகளுக்கு விடை எழுதுதல். அறிந்த சொற்களைக் கொண்டு, தமக்கான நடையில், குறியீடுகள், நிறுத்தக் குறிகளைப் பயன்படுத்தி, பொருண்மைகளை உணர்ந்து தம் நடையில் எழுதுதல்.

நான்காம் வகுப்பு:

உரைப்பகுதியை / துணைப்பாடங்களில் இடம்பெறும் இன்றியமையாச் செய்திகளை எழுத்துவடிவில் வெளிப்படுத்துதல். எளிய வருணனைச் சொற்களைப் பயன்படுத்திச் சிறுசிறு உரைப் பகுதிகளைத் தமக்கான நடையில் எழுதுதல். செய்யுள், பாடல்களை அடிபிறழாமல் எழுதுதல். திருக்குறள், செய்யுள் பகுதிகளை அடி பிறழாமல் எழுதுதல். பல்வேறு நோக்கங்களுக்கேற்ப / சூழல்களுக்கேற்ப எழுதுதல். எளிய வருணனைச் சொற்களைப் பயன்படுத்திச் சிறுசிறு தொடர்கள் எழுதுதல். உறவு முறைக் கடிதம் எழுதுதல். கட்டுரை எழுதுதல். கற்பனையின் அடிப்படையில் கதைகள், பாடல்கள், கவிதைகள், கடிதங்கள் எழுதுதல்.

ஐந்தாம் வகுப்பு:

உரைநடைப் பகுதிகளை உரிய நிறுத்தக்குறிகளுடன் எழுதுதல். உரை / உரைப்பகுதியைச் சொல்லக் கேட்டு உரிய நிறுத்தக்குறிகளுடன் எழுதுதல். பொருத்தமான நிறுத்தக் குறிகளைப் பயன்படுத்தி எழுதுதல். சுற்றுப்புறத்தில் நடக்கும் நிகழ்வுகளை உற்று நோக்கி, அவைசார்ந்த தமது கருத்துகளை எழுத்தில் பதிவு செய்தல். நாட்குறிப்பு எழுதுதல், நிகழ்வுகளை விவரித்து எழுதுதல். பல்வேறு சூழல்களுக்கேற்ப எழுதும்போது, மொழியின் இலக்கணக் கூறுகளைப் புரிந்துகொண்டு, பொருத்தமான சொற்கள், தொடர்கள், பழமொழிகள், நிறுத்தக் குறிகளை கவனமாகப் பயன்படுத்தி, எழுதுதல். கற்பனையாகக் கதை எழுதுதல். விண்ணப்பக் கடிதம் எழுதுதல். எழுதியவற்றைத் தாமே மதிப்பீடு செய்தல். குறிப்புச் சட்டகத்தைப் பயன்படுத்தி, கட்டுரை எழுதுதல்.

5. நடைமுறை இலக்கணம்

முதல் வகுப்பு:

முடியும் ஓசையில் திரும்பப் பாடி மகிழ்தல். (ஒலி இயைபுச் சொற்களை உருவாக்குதல்). பன்மை விகுதிகளைச் (கள், க்கள், ங்கள்) சேர்த்து எழுத அறிதல்.

இரண்டாம் வகுப்பு:

ஒத்த ஓசையுடைய சொற்களை இனங்காணல். இன எழுத்துகளை அறிதல். மெல்லினம், வல்லினம், இடையினம் எழுத்துகளை அறிதல் (பெட்டிச்செய்தி). குறில் நெடில் எழுத்துகளின் ஒலியளவு வேறுபாடு (மாத்திரை) அறிதல்.

மூன்றாம் வகுப்பு:

ஐம்பால் வகையறிதல் (ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்). ஒருமை, பன்மை வேறுபாடு அறிதல் (அது அவை). இரு திணை அறிதல் (உயர்திணை, அஃறிணை). பெயர்ப்பயனிலை, வினைப் பயனிலை, வினாப் பயனிலை அறிதல்.

நான்காம் வகுப்பு:

சொற்றொடர் அமைப்புமுறை (எழுவாய், செயப்படுபொருள், பயனிலை) அறிதல். பெயர்ச்சொற்கள், வினைச் சொற்கள், பதிலிப் பெயர்ச் சொற்கள் அறிதல். காலம் (இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்). மூவிடம் அறிதல் (தன்மை, முன்னிலை, படர்க்கை). உரிய இணைப்புச் சொற்களைப் பொருத்தமான இடங்களில் சேர்த்து எழுதுதல் (ஏனெனில், அப்படியானால், அப்படியில்லாவிட்டால்).

ஐந்தாம் வகுப்பு:

எழுவாய், பயனிலை அறிமுகம் மற்றும் பயன்பாடு அறிதல்.

6. கற்கக் கற்றல்

முதல் வகுப்பு:

படக் கதைகளைப் பார்த்தறிந்து உரையாடுதல். சிறுவர்களுக்கான படக்கதை, படத்தொகுப்பு பார்த்தும் படித்தும் மகிழ்தல்.

இரண்டாம் வகுப்பு:

படத்தொகுப்பைப் பார்த்து / படித்தறிந்து கதை கூறுதல். சிறுவர்களுக்கான படவிளக்க அகரமுதலியைப் பயன்படுத்துதல். கணினியில் எளிய மொழி விளையாட்டுகளை விளையாடி மகிழ்தல். பெரியஎழுத்து சிறுவர்களுக்கான கதை நூல்களைப் படித்தல்.

மூன்றாம் வகுப்பு:

குழந்தைகளுக்கான எளிய அகரமுதலிகளைப் பயன்படுத்த அறிதல். கணினியில் சித்திரக் கதைகள், பாடல்கள் கேட்டு மகிழ்தல். சித்திரக் படக்கதைகளைத் தேடிப் படித்தல்.

நான்காம் வகுப்பு:

எளிய அகரமுதலியைப் பயன்படுத்துதல். கணினியில் குழந்தைகளுக்கான புதிர்கள், மொழி விளையாட்டுகள் விளையாடுதல். தகவல்கள், சொற்பொருள் தேடி அறிதல். கதை நூல்கள் படித்தல்.

ஐந்தாம் வகுப்பு:

கணினியில் வசனங்கள், முழக்கத்தொடர்கள், உரைகள், செய்தித்தாள்கள், கதை நூல்கள் படித்தல். சொற்போர், நாடகங்கள், உரைகள் கேட்டல். இணையத்தில் தேடிப் படித்தல்.

7. சொற்களஞ்சியப் பெருக்கமும் சொல்லாட்சித் திறனும்

(கீழ்க்காணும் சொற்களைக் கேட்டும், படித்தும், கற்றறிந்தும் பேச்சிலும் எழுத்திலும் பயன்படுத்துதல்)

முதல் வகுப்பு:

விலங்குகள், பறவைகள், வாகனங்கள், நிறங்கள், சுவைகள், கிழமைகள், மாதங்கள் (தமிழ்/ஆங்கிலம்), திசைகள், வடிவங்களின் பெயர்கள்.

இரண்டாம் வகுப்பு:

பெயர்ச் சொற்கள், வினைச்சொற்கள், எதிர்ச்சொற்கள், இரட்டைச் சொற்கள் (பள பள, மடமட..), மரம், செடி, கொடிகள், பொது இடங்கள் (பள்ளி, பேருந்து நிலையம், மருத்துவமனை..), குடும்ப உறுப்பினர்கள், காய்கள், பழங்கள், தின்பண்டங்களின் பெயர்கள்.

மூன்றாம் வகுப்பு:

உணவுப் பொருள்கள், ஆடை வகைகள், அணிகலன்கள் பெயர்கள். எளிய வருணனைச் சொற்கள், நகரங்கள், ஊர்களின் பெயர்கள், தன் ஊர், மாவட்டம், மாநிலம், நாடு ஆகியவற்றின் பெயர்கள், இன்றியமையா இடங்களின் பெயர்கள், வீடு, பள்ளிகளிலுள்ள பொருள்களின் பெயர்கள், பழமொழிகள், மரபுத் தொடர்கள். சொற்களஞ்சியப் பெருக்கத்திற்காக சிறுவர்களுக்கான படக்கதைகள் படித்தல்.

நான்காம் வகுப்பு:

தொழிலாளர், தொழிசார் பெயர்கள், சிறப்பு வாய்ந்த இடங்களின் பெயர்கள், பிற நாடுகள், உலகத் தலைவர்கள், இன்றியமையா இடங்களின் பெயர்கள் (இந்திய மாநிலங்கள், தமிழ்நாட்டின் மாவட்டங்கள்), ஆளுமைகளின் பெயர்கள் (நாட்டின் பிரதமர், குடியரசுத் தலைவர், முதலமைச்சர், ஆளுநர், கல்வி அமைச்சர்...), கலைச்சொற்கள். சொற்களஞ்சியப் பெருக்கத்திற்காக சிறுவர்களுக்கான கதைகள், பாடல்கள் படித்தல்.

ஐந்தாம் வகுப்பு:

பழமொழிகள், மரபுத் தொடர்கள், நேரிணை (உயர்ந்தோங்கிய), எதிரிணைச் (ஏற்ற இறக்கம்) சொற்களைப் பயன்படுத்துதல். ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள், கணினி இணையம் சார்ந்த கலைச் சொற்கள், பலதுறை சார்ந்த அறிவியல் கலைச் சொற்கள். சொற்களஞ்சியப் பெருக்கத்திற்காக சிறுவர்களுக்கான இலக்கியங்கள் படித்தல்.

8. படைப்புத் திறன்கள்

முதல் வகுப்பு:

ஒத்த ஓசையுடைய சொற்களை உருவாக்குதல். ஒருமையைப் பன்மையாகவும் பன்மையை ஒருமையாகவும் மாற்றுதல். கொடுக்கப்பட்ட எழுத்துகளிலிருந்து சொற்களை உருவாக்குதல். கதையின் முடிவை விருப்பம் போல மாற்றிக் கூறுதல்.

இரண்டாம் வகுப்பு:

முதல் எழுத்தை மாற்றி வேறு சொல் உருவாக்குதல். ஒரே எழுத்தில் தொடங்கும் பல்வேறு சொற்களை எழுதுதல். கொடுக்கப்பட்ட சொல்லிருந்து பல்வேறு சொற்களை உருவாக்குதல். முதல் சொல்லின் இறுதி எழுத்தைக்கொண்டு அடுத்த சொல்லைத் தொடங்கி எழுதுதல்.

மூன்றாம் வகுப்பு:

சொல் விளையாட்டுகளில் பங்கேற்றல். குறிப்பிட்ட சொல்லில் தொடங்கும், முடியும் சொற்களை உருவாக்குதல். கதையைத் தொடர்ந்து கூறி முடித்தல் (ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ...). பாடலின் வரிகளை மாற்றிப் பாடுதல். பாடலின் வரிகளைத் தொடர்ந்து பாடி முடித்தல் (காகம் கா கா, கிளி கீ கீ, குயில் கூ கூ).

நான்காம் வகுப்பு:

விளம்பரங்கள், அறிவிப்புகள், நிகழ்ச்சி நிரல் உருவாக்குதல். நகைச்சுவைத் துணுக்குகள் உருவாக்குதல். நிகழ்ச்சியைச் செய்தியாக்குதல். தலைப்புச் செய்தியை விரித்து எழுதுதல். கற்பனைக் கடிதம் எழுதுதல்.

ஐந்தாம் வகுப்பு:

குறிப்புகளைக் கொண்டு கதைகளை உருவாக்குதல். பாதிக்கதையைத் தொடர்ந்து மீதிக் கதையைக் கூறி முடித்தல். குறுந்தகவல்கள், விளம்பரங்கள், அறிவிப்புகள், முழக்கத் தொடர்கள் உருவாக்குதல். பாடல் அடிகளை நீட்டிக் கொண்டே செல்லுதல். குறிப்பிட்ட தலைப்பில் கவிதை, உரை, கதை, தயாரித்தல்/ எழுதிப் படித்துக்காட்டல்.

9. விழுமியங்களைப் பின்பற்றும் திறன்

முதல் வகுப்பு:

நேரந்தவறாமை, விதிகளைப் பின்பற்றுதல், தூய்மை பேணுதல், பொருள்களைப் பாதுகாத்தல், பிறர்க்கு உதவுதல்.

இரண்டாம் வகுப்பு:

நேரந்தவறாமை, விதிகளைப் பின்பற்றுதல், தூய்மை பேணுதல், பொருள்களைப் பாதுகாத்தல், பிறர்க்கு உதவுதல், பிற உயிர்களிடத்தில் அன்பு காட்டுதல், கூட்டுணர்வு.

மூன்றாம் வகுப்பு:

நேரந்தவறாமை, விதிகளைப் பின்பற்றுதல், தூய்மை பேணுதல், பொருள்களைப் பாதுகாத்தல், பிறர்க்கு உதவுதல், பிற உயிர்களிடத்தில் அன்பு காட்டுதல், கூட்டுணர்வு, நட்புணர்வு, உண்மை பேசுதல், சேமிப்பு உணர்வு, சிக்கனம், நேர்மை, நன்றியுணர்வு, தன்னம்பிக்கை.

நான்காம் வகுப்பு:

நேரந்தவறாமை, விதிகளைப் பின்பற்றுதல், தூய்மை பேணுதல், பொருள்களைப் பாதுகாத்தல், பிறர்க்கு உதவுதல், பிற உயிர்களிடத்தில் அன்பு காட்டுதல், கூட்டுணர்வு, நட்புணர்வு, உண்மை பேசுதல், சேமிப்பு உணர்வு, ஒற்றுமை, விட்டுக் கொடுத்தல், நாட்டுப்பற்று, விடாமுயற்சி.

ஐந்தாம் வகுப்பு:

நேரந்தவறாமை, விதிகளைப் பின்பற்றுதல், தூய்மை பேணுதல், பொருள்களைப் பாதுகாத்தல், பிறர்க்கு உதவுதல், பிற உயிர்களிடத்தில் அன்பு காட்டுதல், கூட்டுணர்வு, நட்புணர்வு, உண்மை பேசுதல், சேமிப்பு உணர்வு, மொழிப்பற்று, உழைப்பு, அறிவியல் மனப்பான்மை, இயற்கையை நேசித்தல், சகோதரத்துவம்.

10. வாழ்வியல் திறன்களை அறிதல் (1 முதல் 5 ஆம் வகுப்பு வரை)

(அனைத்து வகுப்புகளுக்கும் பொதுவான திறன்கள்)

  • தன்னை அறியும் திறன்
  • சிக்கல் தீர்க்கும் திறன்
  • முடிவெடுக்கும் திறன்
  • கூர்சிந்தனைத் திறன்
  • படைப்பாக்கச் சிந்தனைத் திறன்
  • சிறந்த தகவல் தொடர்புத் திறன்
  • இணக்கமான உறவுக்கான திறன்கள்
  • பிறரை அவர் நிலையிலிருந்து புரிந்துகொள்ளும் திறன்
  • உணர்வுகளைக் கையாளும் திறன்
  • மன அழுத்தத்தைக் கையாளும் திறன்

Post a Comment

0 Comments