TRB நேரடி பணி நியமனத்தில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு சிறப்பு
மதிப்பெண்: அரசாணை வெளியீடு
டிஆர்பி நேரடி பணி நியமனத்தில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு சிறப்பு
மதிப்பெண் 15 வழங்கி பள்ளிக்கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை செயலர் பி.சந்திர மோகன் நேற்று வெளியிட்ட
அரசாணையில் கூறியிருப்பதாவது: அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் நிரந்தர
சிறப்பு ஆசிரியர் பணியிடங்களில், பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க
ஏதுவாக நேரடி நியமன தேர்வுகளில் பகுதிநேர பணிக்காலத்தை அடிப்படையாகக்
கொண்டு அவர்களுக்கு சிறப்பு மதிப்பெண் அளிக்கப்படும் என கடந்த ஜன.24-ம் தேதி
சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து, அனைவருக்கும் கல்வி திட்டத்தின்கீழ் பணியாற்றிவரும்
பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு பணி ஆண்டுக்கும் ஒன்றரை
மதிப்பெண் வீதம் அதிகபட்சம் 15 மதிப்பெண் வழங்குமாறு அரசுக்கு
பள்ளிக்கல்வி இயக்குநர் கருத்துரு அனுப்பினார்.
அதையேற்று சிறப்பு ஆசிரியர் நேரடி நியமனத்தில் பகுதிநேர சிறப்பு
ஆசிரியர்களுக்கு ஒரு ஆண்டுக்கு ஒன்றரை மதிப்பெண் வீதம் அதிகபட்சமாக 15
சிறப்பு மதிப்பெண் அளிக்க ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுமதி அளித்து அரசு
ஆணையிடுகிறது.
இந்த சிறப்பு மதிப்பெண் சலுகை கடந்த 2011 முதல் தொடர்ந்து பணியில் இருக்கும்
பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களுக்கு மட்டுமே பொருந்தும். அதேபோல், இந்த
நடைமுறை அடுத்த 5 பணிநியமன தேர்வுகளுக்குப் பின்பற்றப்படும். இவ்வாறு
அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
ஓவியம், தையல், இசை, உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர் நியமனத்துக்கு
தற்போது மொத்தம் 100 மதிப்பெண் வழங்கப்படுகிறது. இதில் 95 மதிப்பெண்
எழுத்துத் தேர்வுக்கானது.
எஞ்சிய 5 மதிப்பெண் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்புக்கு வழங்கப்படும்.
எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்புக்கு
அழைக்கப்படும்போது வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்புக்கான (சீனியாரிட்டி)
மதிப்பெண் வழங்கப்படும்.
அந்த வகையில் தற்போது சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரும் போது வேலைவாய்ப்பு
பதிவு மூப்புக்கான மதிப்பெண்ணுடன் கூடுதலாக சிறப்பு மதிப்பெண்ணாக 15
வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments