சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு
இந்தியாவில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக
பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை
பெறவும், நெட் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும்.
இந்த தேர்வு தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில், ஆண்டுக்கு இருமுறை
கணினிவழியில் நடத்தப்பட்டு வருகிறது. இதில், சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு, 5
அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு மட்டும் பிரத்யேகமாக நடத்தப்படும்.
அதன்படி, 2025-ம் ஆண்டுக்கான சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு நாடு முழுவதும் 220
நகரங்களில் கடந்த டிச.18-ல் நடத்தப்பட்டது. இந்த தேர்வெழுத 2,12,552
பட்டதாரிகள் விண்ணப்பித்தனர். அதில், 1,54,080 பேர் தேர்வில்
பங்கேற்றனர்.
இந்நிலையில், சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு முடிவுகளை என்டிஏ தற்போது
வெளியிட்டுள்ளது. அதன் விவரங்களை தேர்வர்கள் csirnet.nta.ac.in/ என்ற
இணையதளத்தில் அறியலாம்.
மேலும், பட்டதாரிகள் மதிப்பெண் சான்றிதழையும் மேற்கண்ட தளத்திலேயே
பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இதில் ஏதேனும் சிரமங்கள் இருப்பின்
011-40759000/ 69227700 என்ற தொலைபேசி மூலமாக அல்லது
csirnet@nta.ac.in எனும் மின்னஞ்சல்
முகவரி வாயிலாக தொடர்புக் கொண்டு உரிய விளக்கம் பெறலாம்.
இதுகுறித்த கூடுதல் விவரங்களை /nta.ac.in/ என்ற வலைத்தளத்தில் அறியலாம்
என்று, என்டிஏ வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments