1 முதல் 8ம் வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

1 முதல் 8ம் வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டு உள்ள பள்ளிகளில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி முறையில் வகுப்புகளை தொடங்குவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பள்ளிகள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஜனவரி 19ம் தேதி 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும், பிப்ரவரி 8 முதல் 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கும் நேரடி முறையில் பாடங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. 

மேலும் 11 மாதங்களுக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளதால் மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிகளுக்கு வருகை புரிகின்றனர். 9 மற்றும் 11ம் வகுப்பில் நேற்று 90 சதவீத மாணவர்கள் வருகை புரிந்ததாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

பல்வேறு மாநிலங்களில் 1 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெறுகிறது. இதனால் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கொரோனா தொற்றிற்கு உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. 

ஆனால் தமிழகத்தில் பள்ளிகளை திறப்பதில் அரசு படிப்படியாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற பள்ளிகளுக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களிடம் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த அமைச்சர், தமிழகத்தில் பிற அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகளை திறக்க பரிசீலனை செய்யப்பட்டு ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்து உள்ளார். மேலும் முதல்வர் அவர்கள் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவார் எனவும் கூறப்பட்டு உள்ளது.

Post a Comment

0 Comments