தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் விடுமுறை முடிந்த பிறகே பள்ளிகளை திறக்க வேண்டும் - பெற்றோர்கள் எதிர்பார்ப்பு

    அரசு மற்றும் தனியார் பள்ளிகளை வரும் 16ம் தேதி முதல் திறக்க தமிழக அரசு முடிவு செய்து அறிவித்தது. இதற்கு திமுக உள்பட எதிர்க்கட்சிகளும், பல்வேறு கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். கொரோனா பரவலின் 2ம் சுற்று ஆபத்து இருப்பதால், பள்ளிகளை திறக்க கூடாது என கூறினர். இதையடுத்து தமிழகம் முழுவதும் பெற்றோர்கள், பொதுமக்களிடம் பள்ளிகளை எப்போது திறக்கலாம் என்பது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடந்தது.

      செங்கல்பட்டு கல்வி மாவட்டம், திருப்போரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் அசோகன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் குகானந்தம், பொருளாளர் தேவராஜ் ஆகியோர் முன்னிலையில் கருத்து கேட்பு கூட்டம் நடந்து. இதில் 100க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டனர். அப்போது சிலர் ‘‘வீட்டில் பிள்ளைகளின் தொல்லை தாங்கவில்லை, இதனால் பள்ளியை உடனே திறக்க வேண்டும். எப்போதும் செல்போனில் விளையாடி கொண்டிருக்கின்றனர்’’ என கூறினர். ஒரு சில பெற்றோர்கள், ‘‘தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளது. மழைக்காலம் முடிந்து மார்கழி குளிர் வர உள்ளது. அப்போது கொரோனா கிருமியின் தாக்கம் அதிகரிக்கும். இதற்கு அரசும், பள்ளி நிர்வாகமும் என்ன முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும், அதை மாணவர்கள் முறையாக பின்பற்றுவார்கள் என கண்காணிக்க முடியாது.

     இதனால் கொரோனா பரவல் அதிகரிக்கும், எனவே, தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் விடுமுறை முடிந்த பிறகே பள்ளிகளை திறக்க வேண்டும்’’ என்றனர். அதேபோல் திருப்போரூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை சுப்புலட்சுமி, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கணேசன் ஆகியோர் முன்னிலையில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் 171 பேர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை கூறினர். இந்த கூட்டங்களில் கலந்து கொண்ட பெற்றோர்களிடம் இருந்து அரசு சார்பில் வழங்கப்பட்ட கருத்து கேட்பு படிவம் பூர்த்தி செய்து பெற்று, அவை மாவட்ட கல்வி அலுவலருக்கு அனுப்பப்பட்டது.


Post a Comment

0 Comments