புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் திறந்த புத்தக தேர்வு முறையைப் பின்பற்றித் தேர்வெழுத அனுமதி

  புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் இணைக்கப்பட்டுள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் இறுதியாண்டு தேர்வை, மாணவர்கள் திறந்த புத்தக தேர்வு(Open Book Examination) முறையைப் பின்பற்றித் தேர்வெழுத அனுமதி அளித்துள்ளது பல்கலைக்கழக தேர்வு ஆணையம். கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக ஏப்ரல் மாதம் நடக்க இருந்த புதுவைப் பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.

   இதனிடையே, புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு தேர்வு தவிர்த்து, இதர அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. மேலும், அவர்களுக்கான மதிப்பெண் கடந்த கால செமஸ்டர் தேர்வு மற்றும் இன்டர்னல் மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ச்சி முடிவுகள் வெளியிடப்படும் எனப் புதுச்சேரி பல்கலைக்கழக தேர்வு ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

       இதனைத் தொடர்ந்து, புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தள்ளி வைக்கப்பட்ட இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வு நடத்துவது குறித்து புதுவை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "மாணவர்களுக்கு நியாயமான தேர்வை உறுதி செய்யும் விதமாகப் புதுவை பல்கலைக்கழகத்தில் இறுதி தேர்வுகள் எழுத ஆன்லைன், ஆஃப்லைன் மற்றும் இரண்டும் கலந்த வகையில் மாணவர்கள் விரும்பும் வகையில் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

      பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரையின்படி திறந்த புத்தக தேர்வு (Open Book Examination) முறையைப் பயன்படுத்தி இறுதியாண்டு தேர்வு எழுதும் மாணவர்கள் அவர்களின் தேர்வைப் புத்தகம், குறிப்பேடுகள் மற்றும் பிற ஆய்வு பொருட்களைப் பார்த்துத் தேர்வெழுத அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த வழிமுறையில், கேள்விகளுக்கான பதில்களை மாணவர்கள் எழுதும் போது அவற்றைப் பதில்களைப் பார்த்து எழுதாமல், கேள்விக்கான பதிலைப் புரிந்து கொண்டு பதில் அளிக்க வேண்டும். தற்போது கொரோனா தொற்று பரவி வருவதால் தேர்வின் போது மாணவர்கள் அவர்களுடைய புத்தகம் மற்றும் குறிப்பேடுகளைப் பரிமாறாமல் இருப்பதைத் தலைமை கண்காணிப்பாளர் உறுதி செய்வார்.

    தேர்வுகளின் கால நேரம், வினாத்தாள்களின் முறை மற்றும் பிற நிபந்தனைகள் ஆகியவற்றில் முன்பிருந்த முறையே பின்பற்றப்படும். அனைத்து கேள்விகளுக்கான பதிலையும் மாணவர்கள் ஏ4 வெள்ளைத் தாளில் கருப்பு மை கொண்டு பதிலளிக்க வேண்டும். தேர்வு முடிந்து பிறகு அனைத்து பக்கங்களையும் தேர்வு முடிந்த 30 நிமிடத்திற்குள் ஸ்கேன் செய்து, ஒரே பிடிஎஃப்(.pdf) விடைத்தாளாக மாற்றி அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

    முதல் பக்கத்தில் மாணவர்களின் பதிவு எண், பாடம், பிரிவு, தேதி ஆகியவற்றைக் குறிப்பிட்டு தங்கள் கையெழுத்தை முழுமையாக எழுத வேண்டும். இரண்டாம் பக்கத்திலிருந்து விடைகளை எழுதத் தொடங்க வேண்டும்," எனப் புதுவை பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.



Post a Comment

0 Comments