பிளஸ் 2 தேர்வு எழுதாமல் உள்ள மாணவர்கள் அனைத்து பாடங்களையும் எழுதிக்கொள்ள அனுமதி

      பிளஸ் 2 தேர்வு எழுதாமல் உள்ள மாணவர்கள் அனைத்து பாடங்களையும் எழுதிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நாளை ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். மேலும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடத்த உள்ளார். இதையடுத்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழா மேடை அமைக்கும் பணியினை அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் மற்றும் ஆகியோர் வியாழக்கிழமை ஆய்வு செய்தனர். பின்னர் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:


     பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து தான் உடனடியாக பிளஸ் 2 தேர்வு முடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதாத மாணவர்கள் வருகின்ற 27-ஆம் தேதி தேர்வுகளை எழுதிக்கொள்ளலாம். எத்தனை மையங்கள் தேவை என்றாலும் அத்தனை மையங்கள் ஒதுக்கப்படும்.


   தேர்வு முடிந்ததும் உடனடியாக விடைத்தாள்கள் திருத்தப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். எனவே தேர்வு எழுதாத மாணவர்கள் அச்சப்படத்தேவையில்லை. மொத்தம் 34,842 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. இந்த மாணவர்கள் 5 பாடங்களையும் எழுதவில்லை. ஒரு சிலர் நான்கு பாடங்களை எழுதவில்லை. 123 மாணவர்கள் மட்டுமே 5 பாடங்களை எழுதி உள்ளனர். ஆனாலும் அனைத்து மாணவர்களும் அனைத்து தேர்வுகளையும் எழுதிக்கொள்ளலாம் என்று அரசு அனுமதி வழங்கி உள்ளது என்றார். ஆய்வின் போது எம்.எல்.ஏ.க்கள் கே.வி.இராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, ஆட்சியர் சி.கதிரவன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர். பி.தங்கதுரை உடனிருந்தனர்.


Post a Comment

0 Comments