இரண்டு தொகுதிகள் கொண்ட 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பாடநூல்கள் ஒரே புத்தகமாக மாற்றம்

  தமிழகத்தில் சிபிஎஸ்இ பாடப் புத்தகங்களுக்கு இணையாக உருவாக்கப்பட்ட இரண்டு தொகுதிகள் கொண்ட 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பாடநூல்கள் ஒரே புத்தகமாக மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

      புதிய பாட புத்தகங்கள் தயாரானபோது சிபிஎஸ்இ பாடப் புத்தகங்களுக்கு இணையாக, அதிக பக்கங்கள் கொண்ட தாகவும், அதிக கருத்துக்கள் கொண்டதாகவும், 2 தொகுதிகள் கொண்ட புத்தகங்களாகவும் உருவாக்கப்பட்டன. ஆனால் இந்த பாடத்திட்டங்கள் அளவுக்கு அதிகமாக இருக்கின்றன என்றும், இவற்றை குறைக்க வேண்டும் என்றும் கல்வித்துறைக்கு தொடர்ச்சியாக கோரிக்கைகள் வந்தன.

   இதனையடுத்து பாடத்திட்டங்களின் அளவு பல்வேறு வகுப்புகளில் குறைக்கப்பட்டுள்ளன. 2 புத்தகங்களை கொண்ட 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல், வரும் கல்வி ஆண்டில் ஒரே பாடப்புத்தகமாக மாற்றப்பட்டுள்ளது. அதேபோல் 11 மற்றும் 12ம் வகுப்புகளில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய மூன்று பாடப் புத்தகங்கள் மட்டுமே இரண்டு தொகுதிகள் கொண்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,

    வர்த்தக கணிதம் உள்ளிட்ட பல்வேறு பாடப் புத்தகங்கள் இரண்டு தொகுதிகளுக்கு பதிலாக ஒரே புத்தகமாக மாற்றப்பட்டு இருப்பதாகவும், இந்த மாற்றங்கள் அனைத்தும் வரும் கல்வி ஆண்டில் அமலுக்கு வரும் என்றும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால் மாணவர்கள் படிக்கும் சுமை வெகுவாக குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments