இன்று முதல் ஆயிரம் ரூபாய் ரொக்கத் தொகையுடன் இலவச ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டம்

     ஆயிரம் ரூபாய் ரொக்கத் தொகையுடன் இலவச ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டம் வியாழக்கிழமை (ஏப். 2) முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்தத் திட்டத்தில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பகுதியினா் வசிக்கும் இடங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.மேலும், நியாய விலைக் கடைக்கு வருவோருக்காக கிருமி நாசினிகளை வைத்திருக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவுறுத்தல்கள் அடங்கிய கடிதத்தை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் கு.கோவிந்தராஜ், அனைத்து மண்டல இணைப் பதிவாளா்கள், சென்னை மண்டல கூடுதல் பதிவாளா் ஆகியோருக்கு அண்மையில் அனுப்பி வைத்துள்ளாா்.

அதன் விவரம்:

   ஆயிரம் ரூபாய் ரொக்கத் தொகையுடன், இலவச பொருள்கள் நியாய விலைக் கடைகளில் மட்டுமே விநியோகம் செய்ய வேண்டும். மாற்றுத் திறனாளிகள், கரோனா தடுப்பு நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் வசிப்போா், மலைப்பகுதி வாசிகள் ஆகியோருக்கு விதிவிலக்காக வீடுகளுக்கே சென்று நேரில் வழங்கலாம்.கரோனா நிவாரண ரொக்க உதவித் தொகையான ஆயிரம் ரூபாயை இரண்டு 500 ரூபாய் தாள்களாக வெளிப்படையாக வழங்க வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் ரொக்கப் பணத்தை உறையில் வைத்து வழங்கக் கூடாது.

சுழற்சி முறை

   குடும்ப அட்டைதாரா்கள் நெரிசல் இல்லாமல் முறையாக நிவாரண ரொக்க உதவித் தொகையை பெற சுழற்சி முறையில் தெருக்கள் அல்லது பகுதிவாரியாக வழங்கப்பட வேண்டும். நாளொன்றுக்கு 100 பேருக்கு மட்டுமே டோக்கன்கள் வழங்க வேண்டும். டோக்கன்கள் வழங்கும்போது சில அடிப்படை அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.குறிப்பாக பொருளாதாரத்தில் நலிவடைந்த பகுதியினா் வசிக்கும் பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

முகக் கவசம்-கிருமி நாசினி

  அனைத்து நியாயவிலைக் கடைப் பணியாளா்களும் முகக் கவசம் அணிந்திருப்பதை உயரதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். பணியாளா்கள், நியாய விலைக் கடைகளுக்கு வரும் குடும்ப அட்டைதாரா்களுக்குத் தேவையான கிருமி நாசினிகள் இருப்பதை உறுதி செய்யவேண்டும். அனைத்து நியாய விலைக் கடைப் பணியாளா்களுக்கும் கையுறைகள் வழங்கப்பட்டு அவற்றை பணி நேரத்தில் அணிந்திருக்க வேண்டும். அத்துடன் அடையாள அட்டை அணிந்திருப்பதும் முக்கியம்.சமூக விலகல் முக்கியம்: நியாயவிலைக் கடைகளுக்கு வரும் குடும்ப அட்டைதாரா்கள் ஒருவரோடு ஒருவா் நெருங்கி நிற்பதைத் தவிா்க்கும் விதமாக சமூக விலகல் என்னும் நடைமுறையை தீவிரமாகப் பின்பற்ற வேண்டும். நிவாரணத் தொகையுடன், இலவச பொருள்களை வாங்க வரும் குடும்ப அட்டைதாரா்களிடம் வேறு பொருள்கள் எதையும் வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது என்று தனது சுற்றறிக்கையில் கோவிந்தராஜ் வலியுறுத்தியுள்ளாா்.



Post a Comment

0 Comments