Flash News: முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு பட்டியலை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

     அன்புமணி ராமதாஸ் அறிக்கை!! வேதியியல் பாடத்திற்கான தேர்வுப் பட்டியலில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தவறான முடிவால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்குகளில் நேற்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஆனந்த் வெங்கடேசன் ஆசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீட்டு விதிகளையே தேர்வு வாரியம் புரிந்து கொள்ளவில்லை என்று கண்டனம் தெரிவித்துள்ள நீதியரசர், வேதியியல் பாடத்திற்கான ஆசிரியர் தேர்வுப் பட்டியலை ரத்து செய்து விட்டு, இடஒதுக்கீட்டு விதிகளின்படி புதிய பட்டியலை தயாரிக்கும்படி தேர்வு வாரியத்திற்கு ஆணையிட்டுள்ளது.

      பின்னடைவுப் பணியிடங்களையும், நடப்புக் காலியிடங்களையும் ஒன்றாக நிரப்பும் போது முதலில் நடப்புக் காலியிடங்களுக்கான பொதுப்பிரிவு இடங்கள் நிரப்பப்பட வேண்டும்; பின்னர் ஒவ்வொரு இட ஒதுக்கீட்டுப் பிரிவிலும் முதலில் பின்னடைவுப் பணியிடங்களையும், தொடர்ந்து நடப்புக் காலியிடங்களில் சம்பந்தப்பட்ட இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான இடங்களையும் நிரப்ப வேண்டும் என்று நீதியரசர் ஆனந்த் வெங்கடேசன் தெளிவாக அறிவுறுத்தியிருக்கிறார். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சமூகநீதிப் படுகொலை வேதியியல் முதுநிலை ஆசிரியர்கள் நியமனத்துடன் முடிவடைந்து விடவில்லை. கடந்த ஜனவரி 2&ஆம் தேதி வெளியிடப்பட்ட தமிழ், பொருளாதாரம், வரலாறு ஆகிய பாடங்களுக்கான தேர்வுப் பட்டியலிலும் சமூக அநீதி தொடர்கிறது. இதனால் இந்த பாடங்களில் முறையே 28, 12, 06 மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதை கடந்த 5-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் சுட்டிக்காட்டியிருந்தார்.

   வேதியியல் பாடத்திற்கான புதிய தேர்வுப்பட்டியலை தயாரித்து வெளியிடும்போது தமிழ், பொருளாதாரம், வரலாறு ஆகிய பாடங்களுக்கும் புதிய தேர்வுப்பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் தயாரித்து வெளியிட வேண்டும். இதற்கெல்லாம் மேலாக, சமூகநீதியை நிலை நிறுத்த வேண்டிய அமைப்பான ஆசிரியர் தேர்வு வாரியத்தில் சமூகநீதி மற்றும் இடஒதுக்கீடு குறித்து புரிதல் இல்லாத அதிகாரிகள் நியமிக்கப்பட்டது தான் இவ்வளவு குழப்பங்களுக்கும் காரணம் ஆகும். எனவே, இனிவரும் காலங்களிலாவது இத்தகைய குழப்பங்கள் ஏற்படுவதை தடுக்க சமூகநீதியில் அக்கறையும், புரிதலும் கொண்ட உயரதிகாரிகளை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் போன்ற அமைப்புகளில் நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Post a Comment

0 Comments