அரசு பள்ளி மாணவர்களுக்கு அமெரிக்க நிறுவனம் ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு

      அரசு பள்ளி மாணவர்களுக்கு அமெரிக்க நிறுவனம் ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்பில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கில் தமிழகம் முழுவதும் 412 ‘நீட்’ பயிற்சி மையங்கள் கடந்த 2017-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டன. இங்கு தமிழிலும், ஆங்கிலத்திலும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.இந்த மையங்களில் கடந்த கல்வியாண்டு 19,355 பேர் பங்கு பெற்றனர். முதல் 2 ஆண்டுகள் இதற்கான பயிற்சி வகுப்புகளை ‘ஸ்பீடு’ என்ற நிறுவனம் நடத்தி வந்தது. நடப்பு கல்வியாண்டுக்கான (2019-20) பயிற்சி வகுப்பு கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கியது. ராஜஸ்தானை சேர்ந்த‘ஈடூஸ் இந்தியா’ என்ற நிறுவனம் ஆசிரியர்களுக்கு சிறப்புபயிற்சி அளித்து நடத்தி வருகிறது.

     இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனம் ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி அளிக்க இருப்பதாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து இருக்கிறார்.இதுகுறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில், ‘மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்வுக்கான இலவச பயிற்சி அளிப்பதற்காக ஒரு வாரத்துக்குள் அமெரிக்க நிறுவனத்தினர் வருகை தர உள்ளனர். சிறந்த முறையில் ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி அளிப்பதற்கான ஒப்பந்தம் ஒரு வாரத்துக்குள் நிறைவேற்றப்பட இருக்கிறது’ என்றார்.ஏற்கனவே பயிற்சி அளிக்கும் ராஜஸ்தான் நிறுவனத்துடன் அமெரிக்க நிறுவனமும் சேர்ந்து பயிற்சி அளிப்பார்கள் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

     இதுகுறித்து கல்வியாளர் நெடுஞ்செழியன் கூறுகையில், ‘பயிற்சி மையமே தேவையற்ற ஒன்று தான். இதில் அமெரிக்க நிறுவனத்தை கொண்டு வருவதில் எந்த பயனும் இல்லை’ என்றார்.


Post a Comment

0 Comments