இனி நன்கொடை கிடையாது. அந்த பணத்தை இனி பள்ளி, கல்விச் செலவுகளுக்காக ஒதுக்குவோம் - கிராம மக்கள் அதிரடி

   மகாராஷ்டிராவில் உள்ள ஒரு கிராமத்தில் கோவில்களுக்கு இனி நன்கொடை கிடையாது. அந்த பணத்தை இனி பள்ளி, கல்விச் செலவுகளுக்காக ஒதுக்குவோம் என முடிவு செய்துள்ளது. அக்‌ஷய் குமார் நடிப்பில் ஹிந்தியில் வெளிவந்த 'Oh My God!' படம் பலரையும் கண் திறக்க வைத்தது என்றே சொல்லலாம். அந்த படத்தில் கடவுள் என்கிற பெயரில் நடக்கும் குற்றங்களையும், அதற்கு பொதுமக்கள் செலவு செய்யும் பணம் என்னவாகிறது என்பதையும் சொல்லியிருப்பார்கள். அதேபோல் தமிழில் வெளிவந்த மெர்சல் படத்திலும் கோவில் கட்டும் பணத்தில் மக்களுக்கு பயனுள்ள வகையில் மருத்துவமணை கட்டலாம் என்று முடிவு செய்வார்கள். இப்படி செலவு செய்யும் பணம் அர்த்தமானதாக இருக்க வேண்டும் என்பதே இரு படங்களும் உணர்த்துகின்றன.

       அதை தெளிவாக உணர்ந்த மகாராஷ்டிராவில் அவுரங்காபாத்தில் உள்ள போக்ரி கிராம மக்கள், கோவில்களுக்கு நன்கொடைகள் எதுவும் அளிக்கக் கூடாது என்று முடிவு செய்துள்ளனர். மேலும் கோவிலுக்கு தேவையில்லாமல் செலவுகளும் செய்ய வேண்டாம் என முடிவு செய்துள்ளனர். அதற்கு பதிலாக அந்த பணத்தை பள்ளியை மேம்படுத்தவும், சீரமைக்கவும் பயன்படுத்த உள்ளனர். இந்த கிராமத்தில் ஒவ்வொருவரும் அவரவர் வைத்துள்ள நிலத்திற்கு ஏற்ப பணம் தர வேண்டுமாம். அதாவது ஐந்து ஏக்கர் நிலம் வைத்திருப்போர் 1000 ரூபாய் எனவும், 5 ஏக்கருக்கு மேல் வைத்திருப்போர் 5000 ரூபாயும் தர வேண்டுமாம்

     இந்த பணத்தை வைத்து தற்போது பஞ்சாயத்துப் பள்ளியை விரிவுப்படுத்த 2 ஏக்கர் நிலம் வாங்கப்போவதாக அந்த கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைமை அதிகாரி பவ்னீத் கார் பிடிஐக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். ஏற்கனவே 240 மாணவர்களுடன் சிறந்த பள்ளியாக இருக்கும் நிலையில் அதை உலகத்தரத்தில் உயர்த்த தற்போது அந்த கிராமமே ஒன்று கூடியுள்ளது. ஏற்கனவே இந்த கிராம நிர்வாகம், அங்குள்ள அங்கன்வாடியை தரம் உயர்த்தி டிஜிட்டலாகவும் கண்கவர் வகையிலும் மாற்றியுள்ளது. அடுத்ததாக பள்ளியில் கணினி பயன்பாட்டு வசதிகளையும் 10 லட்சம் செலவில் ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற விஷயங்களுக்கு அந்த கிராம மக்கள் மனநிறைவுடன் செலவு செய்வதாக பஞ்சாயத்து அதிகாரி குறிப்பிடுகிறார்.

     மேலும் அவர் ' கடந்த மூன்று மாதத்திற்கு முன்னரே இந்த கிராம மக்கள் கோவில் மற்றும் திருவிழாக்களுக்கு தேவையில்லாமல் செலவுகள் செய்ய வேண்டாம் என முடிவு செய்தது. அதோடு ஒரு வாரம் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படும் 'பகவத் சப்தா' என்ற விழாவிற்கும் தேவையற்ற செலவுகளைத் தவிர்த்துள்ளது ' என்று கூறியுள்ளார். சுற்று வட்டாரங்களிலிருந்தும் மாணவர்கள் இங்கு பயில்வதால் மற்ற கிராம மக்களும் உதவ முன் வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகக் கூறுகிறார் பவ்னீத் கார்.


Post a Comment

0 Comments