கண்ணீர் விடும் கரும்பலகைகள்! – ஆயிஷா இரா.நடராசன்

Kanneer Vidum Karumbalagaigal Ayesha R Natarajan Teachers Day Article
Special Social Article

கண்ணீர் விடும் கரும்பலகைகள்!

ஆசிரியர் சமூகம் எதிர்கொள்ளும் நிதர்சனமான அவலங்கள் மற்றும் சவால்கள் குறித்த சிந்தனைத் கட்டுரை – ஆயிஷா இரா.நடராசன்

இன்னொரு ஆசிரியர் தினம் வந்துவிட்டது… ஆனால் இன்று ஒரு நாள் ஆசிரியர் தின வாழ்த்துக்களை விதவிதமாக செயற்கை நுண்ணறிவு முதற்கொண்டு பயன்படுத்தி நம்முடைய திறன்பேசிகளில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டால் வேலை முடிந்ததா? ஆசிரியர்களை மிக அதிகம் அவமானப்படுத்தும் நாடு என்கிற ஒரு தரப்பட்டியல் உலகில் வெளியிடப்பட்டால் கண்டிப்பாக முதலிடம் இந்தியாவிற்குத்தான் வழங்கப்படும்.. அதிலும் இந்தியாவில் தமிழ்நாட்டிற்கு முதல் ஐந்து இடங்களுக்குள் நம்மால் வழங்கிவிட முடியும். அத்தனை அவமானங்களை சுமந்து கொண்டுதான் நம்முடைய ஆசிரியர்கள் பணிக்குச் செல்கிறார்கள்.

📌 கட்டுரையின் முக்கியச் சாராம்சம்:

🕒 கூடுதல் பணிச்சுமை

அலுவலகங்கள் திறப்பதற்கு முன்பே பள்ளிகள் திறக்கப்பட்டு, பயோமெட்ரிக் கெடுபிடிகள் மற்றும் தேர்தல், மக்கள் தொகை கணக்கெடுப்பு போன்ற கல்வி சாராத பல பணிகளைச் சுமக்கும் அவலம்.

📊 ஒற்றை ஆசிரியர் பள்ளிகள்

தேசிய அளவில் லட்சக்கணக்கான ஒற்றை ஆசிரியர் பள்ளிகளும், தமிழ்நாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதும் உண்மையான கல்வி நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

⚖️ தேர்வு கலாச்சாரச் சிக்கல்கள்

TET, NET போன்ற தகுதித் தேர்வுகளின் பெயரால் ஆசிரியர்கள் மீதான தொடர்ச்சியான நுழைவுத் தேர்வு அழுத்தங்களும், வினாத்தாள் குளறுடிகளும் ஆசிரியர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றன.

🏫 தனியார் பள்ளி சூழல்

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான முறையான நலவாரியம் மற்றும் குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் இல்லாததால் அவர்கள் படும் வேதனைகள் சொல்லி மாளாது.

ஆசிரியர்களை அவமானப்படுத்தும் நாடு!

ஏனைய அலுவலகங்கள் திறப்பதற்கு 2 மணி நேரம் முன்னதாக பள்ளிகள் திறக்கப்பட்டு விடுகின்றன.. அதிகாலையில் இருள் சூழ்ந்த சூழலில் கண் விழித்து எத்தகைய சமரசமும் இல்லாமல் தனக்கான உணவை சமைத்து எடுத்துக்கொண்டு பல மைல் கடந்து வேலைக்குப் போகும் ஒரு ஆசிரியர்.. 1:00 நிமிடம் அல்லது 2:00 நிமிடம் தாமதமாக வந்தால்கூட.. சம்பளத்தை பிடித்துவிடும்.. பயோமெட்ரி மட்டும் இல்லாத பள்ளியே இல்லை.. குழந்தை படிக்கவில்லையா.. ஆசிரியரே பொறுப்பு. மதிப்பெண் குறைந்து விட்டதா.. ஆசிரியரே பொறுப்பு. ஒழுக்கப்பிரச்னை உள்ளதா.. ஆசிரியர் என்ன கிழிக்கிறார். பெற்றோர்களின் புகார்களா.. ஆசிரியரிடம் விளக்கம் கேளுங்கள். பள்ளியில் சாதி அடிப்படையில் வன்முறை.. ஆசிரியர்களை வரச் சொல்லி விசாரியுங்கள். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்..

எத்தனை மாணவருக்கு ஒரு ஆசிரியர்?

நாட்டில் 2024-25 UDISE தரவுகளின் படி 1.01 கோடி ஆசிரியர்கள் உள்ளனர்.. ஆனால் 1,04,125 பள்ளிக்கூடங்கள் ஒற்றை ஆசிரியர் பள்ளிக்கூடங்களாக உள்ளன.. இவற்றில் சுமார் 34,00,000 மாணவர்கள் கல்வி கற்கிறார்கள்.. இதில் ஏறக்குறைய 4000 பள்ளிகள் தமிழ்நாட்டில் உள்ளன.. ஒரு ஆசிரியர் பள்ளிக்குச் செல்கிறார். அங்கே அவர் தலைமை ஆசிரியராகவும் இருக்க வேண்டும், அலுவலக ஊழியராகவும் இருக்க வேண்டும், மணி அடிப்பவராகவும் இருக்க வேண்டும், கேட் கீப்பராகவும் இருக்க வேண்டும், பல பாடங்களை கற்பிக்கத் தெரிய வேண்டும், மாவட்ட அளவிலான அதிகாரிகள் கூட்டத்திலும் கலந்து கொள்ள வேண்டும்..

ஒரு ஆசிரியரின் தசாவதாரம்!

கற்பிக்கும் நேரத்தை விட்டு விட்டு.. இன்று இந்த ஆசிரியர் தினத்தன்று கூட உங்கள் வீட்டின் கதவைத் தட்டி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுப்பவர் யார்.. தேர்தல் பணி, சுகாதார கணக்கெடுப்பு, வாக்காளர் பட்டியல், ஆவண பணிகள், ஆன்லைன் பதிவு.. மற்றும் ஒரு அரசாங்கம் வழங்கும் எல்லாவிதமான பணிகள்.. என்று தசாவதாரம் எடுக்கும் ஆசிரியர்களின் நிலை மாற்றப்பட வேண்டும். 2026 ஆம் ஆண்டு தமிழக தேர்தல் பணியான BLO பணி கொடுத்த கடுமையான மன அழுத்தம் ஏற்பட்டதால் மூன்று ஆசிரியர்கள் தேர்தல் பூத் உள்ளேயே இறந்து போனார்களே.. இதையெல்லாம் எந்த கணக்கில் வைத்துள்ளார்கள்?

ஆசிரியர்களின் குரலை கேட்காத கல்வி அமைப்பு

ஒரு ஆசிரியரிடம் நாம் தினமும் கேள்வி கேள் குழந்தைகளை கேள்வி கேட்க வை என்று சொல்லிக் கொண்டே இருக்கிறோம். ஆனால் ஆசிரியர்கள் கேட்கும் கேள்விகளுக்கு.. எப்படி பதில் சொல்லப்படுகிறது தெரியுமா.. இந்த கல்வி அமைப்பிடம் ஆசிரியர் கேள்வி கேட்டால் அவருடைய கோரிக்கையை போராட்டமாக அவர் மீது திணிக்கிறார்கள்.. போராட்டம் சட்ட ஒழுங்கு பிரச்சனை என்றெல்லாம் அறிவித்து இறுதியில் ஆசிரியர் காவல் நிலையத்திற்கோ தடுப்புக் காவலுக்கோ அழைத்துச் செல்லப்படுகிறார் என்பதுதான் அவலமான சூழ்நிலை.

தேர்வு கலாச்சாரமும் தகுதித் தேர்வுகளும்

TET தேர்வு என்கிற பெயரில் ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை 2020.. ஆசிரியர்களுக்கு நாலாண்டுகளுக்கு ஒருமுறை தகுதித் தேர்வு எழுதித்தான் ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தை புகுத்தி இருக்கிறது.. தேர்வு நடத்துபவர்களை தேர்வு எழுதுபவர்களாக வைத்திருப்பதில் யாருக்கோ கொடூர மனம் வேலை செய்திருக்கிறது. தமிழ்நாட்டில் இப்போது ஆசிரியர்களாக பணி செய்பவர்களில் தனியார் பள்ளிகளையும் சேர்த்து 63% பேர் 45 வயதுக்கும் உட்பட்டவர்கள்.. அவர்களில் பெரும்பாலானவர்கள் பள்ளி நேரம் போக மீதி நேரம் முழுவதையுமே TET தேர்வு NET தேர்வு என்று நுழைவு தேர்வு பயிற்சி மையங்களில் செலவழித்து படித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

தனியார் பள்ளி எனும் கண்ணீர் தேசம்

இப்போது இருக்கும் வேலைவாய்ப்பு பிரச்சினையில் தனியார் பள்ளி என்று ஒன்று இல்லை என்றால் பல லட்சம் பேர் வீதிகளில் வேலை இல்லாமல் இருப்பார்கள் என்பது உண்மைதான்.. ஏனைய நாடுகளில் இருக்கும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான உரிமை சட்டங்கள் எதுவும் இந்தியாவில் கிடையாது.. தமிழ்நாட்டில் கிடையவே கிடையாது.. தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான நலவாரியம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்பது அந்த ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கை.. தேர்தல் வாக்குறுதியாக கூட கொடுப்பதற்கு யாருக்கும் மனமில்லை.

முடிவுரை

கண்ணீர் விடும் கரும்பலகைகள்.. கண்ணியம் காக்கும் கரும்பலகைகளாக அரசால் சமூகத்தால் உயர்த்தப்பட்டால்.. அப்போது நம்முடைய ஆசிரியர் தினம் உண்மை அர்த்தத்தைப் பெறும்.

📱 Download Tamilaruvi App for Educational & Social Articles

Post a Comment

0 Comments