பணியிலிருக்கும் போது மரணமடையும் அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களுக்கான பணப்பலன்கள்
குடும்பத்தினர் மற்றும் தலைமையாசிரியர்களுக்கான முழுமையான வழிகாட்டு நெறிமுறைகள்
நண்பர்களே வணக்கம். பணியில் இருக்கும் போதே அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரிய நண்பர்கள் மரணமடையும் செய்தி வருத்தத்தை அளிக்கிறது. வருவாய் ஈட்டும் குடும்ப உறுப்பினரை பறிகொடுத்த குடும்பத்தினர் அடுத்து என்ன செய்வார்கள், அவர்களுக்கு எப்படி வழிகாட்டுவது என யோசிக்கும் போது, குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உடன் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் இந்தத் தொகுப்பு வழங்கப்படுகிறது.
பணியில் இருக்கும் போது மரணமடையும் அரசு ஊழியர்கள் குடும்பத்தினர் ஈமக்கிரியை மேற்கொள்ள, உடனடியாக ரூபாய் 25,000 வழங்கப்படுகிறது.
பணியிலிருக்கும் போது மரணமடையும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் குடும்பத்திற்கு நிதி வழங்குவதற்காகவே இந்தத் திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட ஒரு டெர்ம் இன்சுரன்ஸ் பாலிசி (Term Insurance Plan) போன்றது. பணியில் இருந்து ஓய்வு பெற்றவருக்கு இதில் பணப்பலன் எதுவும் கிடையாது.
| அரசாணை & தேதி | மாதாந்திர பிடித்தம் | இறப்பின் போது வழங்கப்படும் தொகை |
|---|---|---|
| அரசாணை 1515 (03.12.1973) | ரூ. 10 (01.01.1974 முதல்) | ரூ. 10,000 |
| அரசாணை 131 (21.02.2006) | ரூ. 30 | ரூ. 1,50,000 |
| அரசாணை 57 (22.02.2016) | ரூ. 60 (பிப்ரவரி 2016 முதல்) | ரூ. 3,00,000 |
| அரசாணை 197 (01.09.2021) | ரூ. 110 (செப்டம்பர் 2021 முதல்) | ரூ. 5,00,000 (தற்போதைய நடைமுறை) |
- பணியாளர் தனது பணிப்பதிவேட்டில் (SR) யாரை சட்டப்பூர்வமான வாரிசாக நியமித்துள்ளாரோ அவரிடம் மட்டுமே பணம் வழங்கப்பட வேண்டும்.
- ஈமக்கிரியைக்காக ரூ. 25,000 முன்பணம் வழங்கப்பட்டிருந்தால், அதனை DDO Bill-ல் சரிசெய்து, மீதமுள்ள ரூ. 4,75,000 மட்டும் வாரிசுதாரருக்கு வழங்க வேண்டும்.
- இந்தத் தொகையில் வேறு எந்தவொரு பிடித்தமும் மேற்கொள்ளக் கூடாது.
பணியாளர் மரணமடைந்தவுடன் இதற்கான பிடித்தமானது நிறுத்தப்படுகிறது.
- இத்திட்டத்தில் அரசு வழங்கும் பங்களிப்புத் தொகையான ரூ. 10,000 மரணமடையும் ஊழியர்களுக்குக் கிடையாது.
- அன்னார் செலுத்திய சந்தா தொகை மற்றும் அச்சந்தாவிற்கான வட்டி ஆகிய இரண்டு மட்டுமே அனுமதிக்கப்படும்.
- இத்தொகையும் பணிப்பதிவேட்டில் நியமிக்கப்பட்டுள்ள வாரிசுதாரருக்கே (Legal Nominee) வழங்கப்படும்.
- இதிலும் எவ்வித பிடித்தமும் செய்யக் கூடாது.
ஈட்டிய விடுப்பு (Earned Leave - EL)
பணியாளர் இறக்கும் போது அவர் கணக்கில் உள்ள ஈட்டிய விடுப்பு நாட்களை (அதிகபட்சம் 240 நாட்களுக்கு மிகாமல்) ஒப்புவிப்பு செய்து பணப்பலனாகப் பெற்று வழங்கலாம். இத்தொகைக்கு வருமானவரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஈட்டா விடுப்பு (Unearned Leave - UEL)
ஈட்டா விடுப்பு கணக்கில் உள்ள நாட்களில் (அதிகபட்சம் 180 நாட்கள்) பாதி நாட்களுக்கு ஒப்புவிப்பு செய்து (90 நாட்களுக்கு மிகாமல்) பணப்பலன் வழங்கலாம்.
ஓய்வு பெறும் பணியாளராக இருந்தால் ஈட்டா விடுப்புத் தொகைக்கு (UEL) வருமானவரி பிடித்தம் செய்யப்படும். ஆனால், இறந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு வேறு வருமானம் இல்லாததால் வருமானவரி பிடித்தம் செய்யப்பட வேண்டியதில்லை.
- குடும்பத்தில் தகுதியான ஒரு நபர், இறந்தவர் கடைசியாகப் பணிபுரிந்த பள்ளித் தலைமையாசிரியர் மூலம் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.
- பணியாளர் இறந்து மூன்று ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பணிமூப்பு (Seniority) என்பது இறந்த தேதியிலிருந்து கணக்கிடப்படுமே தவிர, விண்ணப்பிக்கும் தேதியிலிருந்து அல்ல.
- அனைத்து பணப்பலன்களையும் பெற்ற பிறகே வாரிசு வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
தற்போதைய விதிகள்: இது "TAMIL NADU CIVIL SERVICE (APPOINTMENT ON COMPASSIONATE GROUNDS) RULES 2023" (அரசாணை 33, Labour & Skill Development, நாள்: 08.03.2023) மூலம் நெறிப்படுத்தப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு: www.tncgap.tn.gov.in.
இது 01.04.2003-க்கு முன் பணியில் சேர்ந்த (GPF) பணியாளர்கள் இறக்க நேரிட்டால் மட்டுமே வழங்கப்படுகிறது. ஓய்வு பெறுபவர்களுக்கு வழங்கப்படும் D.C.R.G-க்கும் இதற்கும் வேறுபாடுகள் உள்ளன. (ஓய்வு பெறுபவர்களுக்கு வழங்கப்படும் D.C.R.G-க்கு குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும், அதிகபட்சம் 25 இலட்சம். )
| பணிக்காலம் (Qualifying Service) | பணிக்கொடை விகிதம் (Rate of Gratuity) |
|---|---|
| 1 வருடத்திற்கு குறைவாக | 2 மடங்கு ஊதியம் (2 times of emoluments) |
| 1 வருடம் முதல் 5 வருடங்களுக்கு குறைவு | 6 மடங்கு ஊதியம் |
| 5 வருடம் முதல் 20 வருடங்களுக்கு குறைவு | 12 மடங்கு ஊதியம் |
| 20 வருடங்கள் மற்றும் அதற்கு மேல் | ஒவ்வொரு அரையாண்டு பணிக்காலத்திற்கும் அரை மாத ஊதியம். (அதிகபட்சம் 33 மடங்கு). உச்சவரம்பு: ரூ. 25,00,000/-. |
(Last emolument includes Pay, D.A, P.P, Spl Pay).
கூட்டுறவு சங்கக் கடன் நிலுவை போன்ற சட்டப்பூர்வமாகப் பிடித்தம் செய்யப்பட வேண்டிய தொகைகளை இதிலிருந்து பிடித்தம் செய்யலாம். 01.04.2003-க்கு பிறகு சேர்ந்த CPS பணியாளர்களுக்கு இது மறுக்கப்படுகிறது. எனினும், 01.01.2026 முதல் TAPS-ல் D.C.R.G உள்ளது என அறிவிப்பு வந்துள்ளது, முழுமையான அரசாணை எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக கடைசியாக பெற்ற ஊதியத்தில் 30% குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும். ஆனால், பணியிலிருக்கும் போது மரணமடைந்தால், மேம்படுத்தப்பட்ட/அதிகரிக்கப்பட்ட குடும்ப ஓய்வூதியம் (Enhanced Family Pension) கடைசியாக பெற்ற ஊதியத்தில் 50 சதவீதம் வழங்கப்படும்.
அரசாணை நிலை எண் 313 நிதி (ஊ.கு) துறை நாள் 25.10.2017-இன் படி, பணியாளர் இறந்து 10 ஆண்டுகள் முடியும் வரை அல்லது இறந்த பணியாளருக்கு 65 வயது நிறைவடையும் வரை (இதில் எது முதலில் வருகிறதோ அதுவரை) இந்த 50% Enhanced Family Pension வழங்கப்படும். அதன் பிறகு வழக்கமான குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். குடும்ப ஓய்வூதியத்திற்கு அகவிலைப்படி (DA) உண்டு.
பொது வருங்கால வைப்பு நிதி (GPF Closure)
இறுதித் தொகையை பணிப்பதிவேட்டில் நியமிக்கப்பட்டுள்ள வாரிசுதாரரிடம் வழங்கலாம். அரசாணை 211 (27.05.2009)-படி ஒருங்கிணைந்த விண்ணப்பத்தை பள்ளி மூலமாக மாநில கணக்காயருக்கு (AG) அனுப்ப வேண்டும். தற்போது இது IFHRMS களஞ்சியம் வழியாக அனுப்பப்படுகிறது.
தன்பங்கேற்பு திட்டம் (CPS Closure)
01.01.2014 முதல் இத்திட்டம் அரசு தகவல் தொகுப்பு மையத்தால் பராமரிக்கப்படுகிறது. அரசாணை 59 (22.02.2019)-படி பள்ளி வாயிலாக விண்ணப்பத்தை அரசு தகவல் தொகுப்பு மையத்திற்கு அனுப்ப வேண்டும். இதையும் IFHRMS களஞ்சியம் வழியே அனுப்ப வேண்டும்.
வீடு கட்ட முன்பணம் பெற்ற பணியாளர் இறக்க நேரிட்டால், மீதமுள்ள தொகையைப் பிடித்தம் செய்ய வேண்டியதில்லை. (அரசாணை 613, 30.04.1986 ). இதற்காகவே 01.04.1986 முதல் HBA-FBF திட்டத்தின் கீழ் 1% தொகை வசூலிக்கப்படுகிறது (அரசாணை 513, 02.04.1986). மீதமுள்ள கடன் தொகை இந்த HBA(FBF) மூலம் சரிசெய்யப்படும்.
பள்ளித் தலைமையாசிரியர் கீழ்க்கண்ட 4 பில்களை (BILLS) தயார் செய்து வாரிசுகளின் கணக்கில் (ECS) வரவு வைக்கலாம்:
- ஈமக்கிரியை முன்பணம் ரூ. 25,000
- குடும்ப நல நிதி FBF/FSF (ரூ. 5,00,000) (BILL-1)
- சிறப்பு சேமநல நிதி (SPF84/SPF2K) (BILL-1)
- ஈட்டிய விடுப்பு & ஈட்டா விடுப்பு (EL/UEL) (BILL-2)
இறப்பு பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம், GPF இறுதித் தொகை ஆகியவை மாநில கணக்காயர் அலுவலகம் (AG) ஆணை பெற்ற பின்னரே வழங்கப்படும். CPS தொகை அரசு தகவல் தொகுப்பு மையத்தின் ஆணைக்குப் பின் வழங்கப்படும்.
- விண்ணப்பம்
- இறப்புச் சான்றிதழ் (அசல்)
- வாரிசு சான்றிதழ் (அசல்)
- இறுதிச் சம்பளச் சான்றிதழ்
- பணிப் பதிவேடு (SR)
- பணிப் பதிவேட்டில் வாரிசுதாரர் நியமனப் படிவங்கள் (பக்கங்கள்)
- பணப்பலன் வழங்க வாரிசுதாரர் வங்கிக் கணக்குப் புத்தக நகல்
குறிப்பு: இறப்பு மற்றும் வாரிசு சான்றிதழ்கள் பல இடங்களில் அசலாகத் தேவைப்படும் என்பதால், வருவாய்த்துறையில் உரிய கட்டணம் செலுத்தி 5-6 அசல் சான்றிதழ்களை வாங்கி வைத்துக் கொள்வது நலம்.
குடும்ப ஓய்வூதியம் பெற கூடுதலாக தேவைப்படுபவை:
- விண்ணப்பதாரர் புகைப்படம் - 2
- மறுமணம் ஆகவில்லை என்ற சான்றிதழ்
- விண்ணப்பதாரர் அங்க அடையாளம் (Identification marks)
வங்கி காப்பீடு (SGSP - State Government Salary Package)
நீங்கள் ஊதியம் பெறும் வங்கிக் கணக்கு இத்திட்டத்தின் கீழ் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இயற்கை மரணம் எனில் 10 இலட்சமும், விபத்தினால் மரணம் எனில் 1 கோடி ரூபாயும் வங்கி காப்பீடாகத் தருகிறது. வாரிசுதாரர்கள் வங்கி மேலாளரை அணுகி விண்ணப்பிக்கலாம். இயற்கை எய்திய ஆசிரியரின் LIC, INSURANCE முதலீடுகள் இருப்பின் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு தெரிவித்து பலனை பெறலாம்.
இறுதி ஊதியம் (Last Salary)
பணியாளர் இறக்கும் நாள் வரை அவர் பணியில் இருந்ததாகவே எடுத்துக் கொள்ளப்படும். உதாரணமாக, 20.04.2026 இரவு 10:30 மணிக்கு இறக்கிறார் என்றால், ஏப்ரல் 20 வரை அவருக்கு ஊதியம் உண்டு. அந்த 20 நாள் ஊதியத்தை வாரிசுதாரரின் வங்கிக் கணக்கில் வரவு செய்ய வேண்டும்.
வாரிசுதாரர் நியமனம் (Nominee Updation)
பணியாளர் இறந்த பிறகு பணிப்பதிவேட்டில் எந்த வாரிசுதாரர் நியமனமும் நாமாக புதிதாகச் செய்யக் கூடாது. பணியாளர் உயிருடன் இருக்கும் போதே அவரது விருப்பப்படி நியமனம் செய்திருக்க வேண்டும். SR மற்றும் IFHRMS/Kalanjium ஆகியவற்றில் கீழ்க்கண்டவற்றிற்கு வாரிசுதாரர்களை நியமித்திருக்க வேண்டும்:
- GPF / CPS Final Benefits
- EL/UEL
- SPF84 / SPF2K
- FBF (FSF)
- DCRG
மேற்கண்ட 5 இனங்களுக்கு பணியாளர் யாரை வேண்டுமானாலும் வாரிசாக நியமிக்கலாம் (கணவன்/மனைவி தான் வாரிசு என்பது கட்டாயமில்லை). ஒன்றுக்கு மேற்பட்டவர் எனில் % share பதிவு செய்ய வேண்டும். ஆனால், குடும்ப ஓய்வூதியத்திற்கு (Family Pension) கணவன் அல்லது மனைவி உயிருடன் இருந்தால் அவர்கள் மட்டுமே தகுதியான வாரிசுதாரர் ஆவர். பேங்க், போஸ்டல் முதலீடுகளுக்கும் தகுந்த நேரத்தில் வாரிசுதாரர்களைப் புதுப்பிக்க வேண்டும்.
இந்தப் பயனுள்ள தகவலை அனைத்து ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் குழுக்களிலும் பகிரவும்.
Share on WhatsApp
0 Comments