பொறியியல் கல்வி: மே 2-வது வாரத்தில் விண்ணப்பப் பதிவு
இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை கலந்தாய்வுக்குரிய விண்ணப்பப்
பதிவு மே 2-வது வாரத்தில் தொடங்குகிறது.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் 400-க்கும் மேற்பட்ட
பொறியியல் கல்லூரிகளில் இளநிலை பொறியியல் படிப்புகளுக்கு 1.7 லட்சம்
இடங்கள் உள்ளன. இவை ஆண்டுதோறும் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர
முறையில் நிரப்பப்படுகின்றன.
நடப்பாண்டு பொறியியல் கலந்தாய்வு, தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம்
ஜூலை மாதம் இணைய வழியில் நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு மே
2-வது வாரத்தில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜூலையில் கலந்தாய்வு: இதுகுறித்து தொழில் நுட்பக் கல்வித் துறை அதிகாரிகள்
கூறியதாவது: பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதும் கலந்தாய்வுக்கான
விண்ணப்பப் பதிவு மே 2-வது வாரம் முதல் தொடங்கும். விண்ணப்பம் பெறப்பட்டு ஜூன்
மாதம் தரவரிசை பட்டியலை வெளியிட்டு, ஜூலையில் கலந்தாய்வு நடத்துவதற்கு
திட்டமிட்டுள்ளோம். இதற்கான கால அட்டவணை ஜூனில் வெளியிடப்படும்.
இதுசார்ந்த கூடுதல் விவரங்களை https://www.tneaonline.org/ எனும்
வலைத்தளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். மேலும், ஏஐ போன்ற
தொழில்நுட்பங்கள் வளர்ச்சி காரணமாக பொறியியல் மாணவர் சேர்க்கை கடந்த சில
ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. இந்தாண்டும் சேர்க்கை அதிகரிக்கும் என
நம்புகிறோம். இவ்வாறு அதிகரிகள் கூறினர்.
0 Comments