தமிழக பள்ளிக்கல்வி துறையில், அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், நிர்வாக பணிகள் கடுமையாக பாதிப்பு

    தமிழக பள்ளிக்கல்வி துறையில், அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், நிர்வாக பணிகள் கடுமையாக பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகள் திறப்பதற்கு முன், ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும். அதில், பதவி உயர்வுடன் இடமாறுதல் வழங்கப்படும். இந்த ஆண்டு பல்வேறு வழக்குகளை காரணம் காட்டி, பதவி உயர்வு நிறுத்தப்பட்டுள்ளது.

    இதனால், தொடக்கப்பள்ளிகள் முதல் மேல்நிலை பள்ளிகள் வரை, தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

    தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க, ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமா, இல்லையா என்ற வழக்கு நிலுவையில் உள்ளதால், 8,000க்கும் அதிகமான தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தும் யாருக்கும் பதவி உயர்வு தரப்படவில்லை இதனால், அனைத்து பள்ளிகளிலும், பொறுப்பு தலைமை ஆசிரியர்களே நிர்வாகத்தை கவனிக்கின்றனர். பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வும் வழங்கப்படாததால், அரசு உயர்நிலை பள்ளிகளில், 1,500க்கும் அதிகமான தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

    ஏற்கனவே, உயர்நிலை பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட 1,212 முதுநிலை ஆசிரியர்களின் பதவி குறித்த வழக்கும் நிலுவையில் உள்ளது. மேல்நிலை பள்ளிகளிலும், 150க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

    அதேசமயம், பல பள்ளிகளில், 3,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், மாணவர்களின் எண்ணிக்கை விகிதத்தை விட கூடுதலாக உள்ளனர். உபரி ஆசிரியர்களை, வேறு பள்ளிகளில் பணி நிரவல் செய்யும் நடைமுறை இருந்தாலும், ஒரே கல்வி மாவட்டத்துக்குள் காலி பணியிடம் இல்லாததால் பணி நிரவலும் தடைபட்டுள்ளது.

    மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்படாததால், மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களை நிரப்ப முடியவில்லை. முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் இணை இயக்குநர் பணியிடங்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்படவில்லை.

    இதனால், முதன்மை கல்வி அதிகாரிகள் இல்லாமல், 17 மாவட்டங்களில் கல்விப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் பள்ளிக்கல்வி நிர்வாகம் தடுமாற்றத்தில் உள்ளது.



Post a Comment

0 Comments