சென்னை உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒருங்கிணைந்த எம்.ஏ.
தமிழ் பட்ட படிப்பு: பிளஸ் 2 தேறியவர்கள் விண்ணப்பிக்கலாம்
சென்னையில் உள்ள உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் மாதம்தோறும் ரூ.2 ஆயிரம்
உதவித் தொகையுடன் ஒருங்கிணைந்த எம்.ஏ தமிழ் 5 ஆண்டு பட்டப் படிப்பு
வழங்கப்படுகிறது. பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் ஜூன் 27-ம் தேதி வரை
விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் நேற்று வெளியிட்ட
செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
சென்னை தரமணியில் இயங்கி வரும் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித்
தொகையுடன் 5 ஆண்டுகால ஒருங்கிணைந்த தமிழ் முதுகலை பட்டப் படிப்பு (Integrated
M.A. Tamil) வழங்கப்பட்டு வருகிறது. இந்த பட்டத்தை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம்
வழங்குகிறது. இதில் 2025-26-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
இதில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சேரலாம்.
இதற்கான விண்ணப்ப படிவம், வழிகாட்டி கையேட்டை www.ulakaththamizh.in என்ற
இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது, நேரிலும் பெறலாம். பூர்த்தி
செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன், ‘இயக்குநர், உலக தமிழ் ஆராய்ச்சி
நிறுவனம், 2-வது முதன்மை சாலை, மைய தொழில்நுட்ப பயிலக வளாகம், தரமணி, சென்ன
600113’ என்ற முகவரியில் ஜூன் மாதம் 27-ம் தேதிக்குள் நேரிலோ, தபால் மூலமாகவோ
சமர்ப்பிக்க வேண்டும்.
ரூ.2 ஆயிரம் உதவித் தொகை: இப்படிப்பில் சேரும் மாணவர்களில், தேர்வின்
அடிப்படையில் 15 பேருக்கு மாதம்தோறும் ரூ.2 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும்.
மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே இலவச விடுதி உள்ளது. இதுகுறித்து கூடுதல்
விவரங்கள் அறிய 044-22542992 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட
இணையதளத்திலும் விரிவாக அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 Comments