ஏழை மாணவர்கள் தவிப்பு! ஆன்லைனில் கல்வி கற்க முடியாமல், வாய்ப்பை உருவாக்குமா அரசு?

ஏழை மாணவர்கள் தவிப்பு! ஆன்லைனில் கல்வி கற்க முடியாமல், வாய்ப்பை உருவாக்குமா அரசு?

    ஏழை மாணவர்களுக்கு வாய்ப்பை உருவாக்குமா? வழக்கம்போல் வெளுத்து வாங்கும் தனியார் பள்ளிகள் தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் பல்வேறு தனியார் பள்ளிகள் சமூக ஊடகங்கள், இணைய தளம் மூலம் தங்கள் மாணவர்களுக்கு கல்வி சேவையை தொடங்கியுள்ளன. அதே நேரத்தில் பல லட்சம் அரசுப்பள்ளி மாணவர்கள் இந்த கல்வி சேவை கிடைக்காமல் தவிக்கின்றனர். இதற்கான வாய்ப்பை அரசு உருவாக்க வேண்டும் என கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் கடந்த கல்வியாண்டு முழுமையாக நிறைவு பெறாமல் பள்ளிகள் இழுத்து மூடப்பட்டன. பொதுத்தேர்வுகளை கூட முழுமையாக நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.



           புதிய கல்வி ஆண்டிற்காக ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்க வேண்டும். ஆனால் இன்னும் இரண்டு மாதங்களுக்கு பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகும் நிலையே தற்போது உருவாகியுள்ளது. இதன் காரணமாக 4 மாதங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக மாணவர்கள் வீடுகளில் முடங்கும் நிலை முதல் முறையாக ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மத்தியில் மன உளைச்சல், எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துமோ என்ற அச்சம் பெற்றோர் மற்றும் கல்வியாளர்களிடம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 10ம் வகுப்பு மாணவர்கள் வரை ஆல் பாஸ் என அரசு அறிவித்துவிட்டது. இதேபோல் 11 ஆம் வகுப்பிற்கு நடத்தப்படாத 3 தேர்வுக்கு மட்டும் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வு மட்டும் நடத்தி முடிக்கப்பட்டு விடைத்தாள் திருத்தும் பணியும் நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில் அதிகாரப்பூர்வமாக 1 முதல் 11ம் வகுப்பு வரை மாணவர்கள் அடுத்தநிலை வகுப்பிற்கு செல்வது உறுதியாகி உள்ளதால் தமிழகத்தில் பல்வேறு தனியார் பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி பாடங்களை நடத்துவதற்கான களத்தில் இறங்கி விட்டன.பல தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு வாட்ஸ்அப் குரூப் ஏற்படுத்தி அடுத்த நிலை வகுப்பிற்குரிய பாடங்களை பகலில் குறிப்பிட்ட நேரங்களில் கற்றுத் தருகின்றனர். மேலும் பல பள்ளிகள் செயலிகளை உருவாக்கி மாணவர்களுக்கு நேரலையாக பாடங்களை கற்றுத் தருகின்றன. ஆன்லைன் மூலம் நடத்தப்படும் இந்த முயற்சிக்கு ஓரளவு பலன் கிடைப்பதாக தெரியவந்துள்ளது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் நீர்த்து போயுள்ளன. இதனால் 2 மாதமாக வீடுகளில் முடங்கி இருந்த தனியார் பள்ளிகளின் மாணவர்கள் தற்போது ஆசிரியர்கள் கற்றுத்தரும் பாடங்களை நவீன தொழில்நுட்பங்கள் மூலம் நேரடியாக கற்கத் துவங்கியுள்ளனர். ஆனால் இவை அனைத்தும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே சாத்தியமாகியுள்ளது. 


      தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளியில் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு இதுபோன்ற எந்த கல்விச்சேவையும் கிடைக்கவில்லை. அரசு தற்போதைக்கு தனது ஒரே சேவையாக கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்களை நடத்துகிறது. இது மாணவர்களை ஒருமுகப்படுத்தி பார்க்க வைக்கும் அளவிற்கு அமையவில்லை. சில அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் கற்றுத் தருவது போல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் வரை இணையதள சேவை மூலம் வகுப்பறை உருவாக்கி பாடங்களை நடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கல்வியாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.இதை எப்படி சாத்தியப்படுத்த முடியும். அதற்கான வழிமுறைகள் உள்ளதா என்பது குறித்து கல்வியாளர், பெற்றோர், ஆசிரியர், மாணவர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு: பாண்டுரங்கன் (கல்வி புரவலர் மற்றும் கல்வி ஆர்வலர்): எந்த முறை வகுப்பாக இருந்தாலும் அது பெரும்பான்மை மாணவர்களை மையப்படுத்தி இருப்பது அவசியமாகும். தமிழகத்தில் தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளில்தான் அதிக ஏழை மாணவர்கள் பயில்கின்றனர். கிராமப்புற மாணவர்கள் அரசுப் பள்ளிகளை மட்டுமே நம்பி பயில்கின்றனர். வகுப்பறைக் கல்வியே என்றும் சிறந்ததாக இருக்கிறது. மாணவர்களை வகுப்பறையில் மட்டுமே ஒருமுகப்படுத்தி பாடம் நடத்த முடியும். அவர்கள் பல ஒழுக்கங்களை ஆசிரியர்களிடம் கற்றுக் கொள்கின்றனர். சக மாணவர்களிடமிருந்து உலக நடப்பையும், வாழும் கலையையும் கற்று சமூகத்தில் சிறந்தவர்களாக வளர்கின்றனர். ஆன்லைன் கல்வியில் கவனச்சிதறல் வாய்ப்பு அதிகம் உள்ளது. நேரடி தகவல் பரிமாற்றம் மாணவர்களுக்கு கிடைக்காது. உணர்வுப்பூர்வமான ஈடுபாடு இருக்காது. மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு இது முழுமையாக சாத்தியப்படாது. அவர்கள் விளையாட்டுத்தனமாக இருப்பார்கள். நாமெல்லாம் கல்வி பயிலும் போது ஆசிரியரிடம் அடிவாங்கி தான் பயின்றோம். ஆசிரியரும் எளிமையாக பல கிலோ மீட்டர் தொலைவிலிருந்து சைக்கிளில் பள்ளிக்கு வந்து செல்வார். 



      ஆனால் இன்றைய நிலை அப்படி அல்ல. ஆன்லைன் கல்வியில் மாணவர்கள் ஆசிரியர் உறவு மேலும் தொலைவில் செல்லும் வாய்ப்பு உள்ளது.ஆயினும் தற்காலிக தீர்வாக ஆன்லைன் கல்வியை தனியார் பள்ளிகள் வழங்குவது போல் அரசு பள்ளி மாணவர்களுக்கும் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறிய அரசு உடனடியாக தனி குழு அமைக்க வேண்டும். உரிய ஆய்வு செய்து விரைவில் அதை அமல்படுத்துவது அரசுப்பள்ளி ஏழை மாணவர்களின் எதிர்காலத்திற்கு நல்லதாக இருக்கும். 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் நவீன தொழில்நுட்ப கல்வி வசதிகளை அரசு செய்து கொடுக்க வேண்டும் என்றார்.வெங்கடாசலம் (பெற்றோர், காரியாண்டி): கொேரானா வேகமாக பரவுவதால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பும் பயம் அனைத்து பெற்றோருக்கும் அதிகமாக உள்ளது. கொரோனா முழுமையாக அழிந்தாலும் இந்த அச்சம் விலகுமா எனத் தெரியவில்லை. தனியார் பள்ளிகளில் இப்போது ஆன்லைன் தொழில்நுட்பம் மூலம் பாடம் கற்றுத் தருகின்றனர். இந்த வாய்ப்பு அரசு பள்ளிகளில் இல்லை. நாங்கள் காலையிலேயே விவசாய பணிக்கு சென்று விடுவோம். மாலையில்தான் வீடு திரும்புவோம். மாணவர்களின் எதிர்காலம் கருதி படிப்புக்காக கஷ்டப்பட்டு பணம் சேர்த்து ஸ்மார்ட் போன் வாங்கி கொடுத்தாலும், அதை அவர்கள் கல்விக்கு தான் பயன்படுத்துகிறார்களா என்பதை எங்களால் கண்காணிக்க முடியாது. சிறிய கிராமங்களில் செல்போன் சேவை கூட முழுமையாக கிடைக்காத நிலைதான் உள்ளது. நகர்ப்புற மாணவர்களுக்கு கிடைக்கும் தொழில்நுட்ப கல்வி வசதி எங்களை போன்ற சிறு கிராம மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற ஏக்கம் பெற்றோர் மத்தியில் உள்ளது.அரசுதான் இதற்கு நல்ல தீர்வு காண வேண்டும். பள்ளிக்கு மாணவர்கள் செல்ல மேலும் சில மாதம் ஆகும் என்ற நிலை ஏற்பட்டால் கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடங்களை பயிற்றுவிக்க ஏதாவது திட்டத்தை அரசு அறிவிக்க வேண்டும் என்றார். மாரிமுத்து (மாணவர், ராமகிருஷ்ணா புரம், நெல்லை மா வட்டம்): ஆன்லைன் வகுப்பில் பாடம் பயின்ற முன் அனுபவம் என்னைப் போன்ற கிராமப்புற மாணவர்கள் மத்தியில் இல்லை. நான் இப்போது ஒன்பதாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பிற்கு சென்றுள்ளேன். பத்தாம் வகுப்பு புதிய பாடத்திட்டம் அமல் படுத்தி இருக்கிறார்கள். வகுப்பே தொடங்காத நிலையில் பத்தாம் வகுப்பிற்கு உரிய பாடங்களை பயில வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. தனியார் பள்ளிகளைப் போல் நாங்களும் ஆன்லைனில் கற்கும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. பள்ளியில் ஆசிரியர்கள் தனது மொபைல் போன் அல்லது வசதியுள்ள கம்ப்யூட்டர் ஸ்கிரீன் வீடியோ வகுப்பு போன்றவற்றை நடத்தியிருக்கின்றனர். எங்கள் வீட்டில் எல்லாம் ஸ்மார்ட்போன் வசதியும் இல்லை. ஸ்மார்ட்போன் வசதி உள்ள பெற்றோர் வேலைக்கு செல்கையில் அதை கையில் எடுத்துச் சென்றால் வீட்டிலிருக்கும் மாணவர்கள் பகல் நேரத்தில் ஆன்லைன் வகுப்பில் பயில முடியாது. எனவே பள்ளி திறக்கும் வரை தனியார் பள்ளி மாணவர்கள் போல் நாங்களும் வீட்டிலிருந்தே பாடம் கற்க அரசு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தால் ஆர்வமுடன் படிக்க தயாராக இருக்கிறோம் என்றார்.சுந்தரகுமார் (ஆங்கில ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி): 



      நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தமிழக அரசும் கல்வி பாடத்திட்டங்களை கடந்த 3 ஆண்டுகளாகவே தயார்படுத்தி வருகிறது. தற்போது மாற்றம் செய்யப்படும் அனைத்து பாடப் புத்தகங்களிலும் ‘கியூ ஆர் கோடு’ என்ற வசதி உள்ளது. டிக்க்ஷா என்ற செயலி மூலம் கல்வி கற்பிக்கப்படுகிறது. பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் இணையதள வசதிகளையும் அதற்கான தொழில்நுட்ப ஒளிபரப்பு வசதிகளையும் அரசு ஏற்படுத்தி வருகிறது. மேலும் கடந்த ஆண்டுகளில் ஆசிரியர்களுக்கு கணினி முறையில் கையாண்டு பாடம் கற்பிக்க ஐசிடி பயிற்சி உதவிகளையும் அரசு வழங்கியுள்ளது. இந்த தொழில்நுட்ப வசதி வைத்து பல ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஏற்கனவே பாடம் கற்றுக் கொடுத்திருக்கிறோம். தொலைக்காட்சி வசதி ஏற்படுத்திய பள்ளிகளில் கல்வி சேனல் மூலம் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படுகிறது. மேலும் வீடியோ படக் காட்சிகள் மூலமும் அரசு பள்ளிகளில் பாடம் கற்பிக்கப்பட்ட முன்னோட்ட நிகழ்ச்சிகளும் நடந்துள்ளன. முதுகலை ஆசிரியர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது.இதுபோல் பிளஸ்-1 பிளஸ்-2 மாணவர்களுக்கு லேப்டாப் அரசு வழங்கியிருக்கிறது. இவை எல்லாமே வகுப்பறையில் வைத்து மாணவர்களுக்கு நேரடியாக கற்றுத் தந்திருக்கிறோம். இப்போதுள்ள கொரோனா சூழல் காரணமாக மாணவர்கள் வீட்டிலிருந்தே கல்வி கற்க அரசு அனைத்து மாணவர்களுக்கும் இலவச கல்வி திட்டங்களை வழங்குவது போல் ‘டேப்லட் பிசி’ வழங்கும் வாய்ப்பை உருவாக்கினால் மாணவர்கள் வீட்டிலிருந்து ஆசிரியர்களை தொடர்பு கொண்டு கல்வி கற்க முடியும். சில கிராமப்புறங்களில் நெட்வொர்க் சேவை சரியாக கிடைப்பதில்லை. எனவே அதற்கான வசதிகளையும் முன்னதாக ஏற்படுத்துவது அவசியம். ‘டேப்லெட் பிசி’ கொடுக்கும்போது மாணவர்கள் கல்வி கற்பதற்கு மட்டும் பயன்படும் வகையில் அதற்கான வசதிகளை தொழில்நுட்ப முறையில் ஏற்படுத்திக் கொடுக்கலாம். இதனால் அதை மாணவர்கள் தவறாக பயன்படுத்தும் வாய்ப்பு ஏற்படாது என்றார்.


Post a Comment

0 Comments