பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வுக்கான ஆயத்தப் பணிகளை அரசு தொடங்கியுள்ளது

    தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு வரும் ஜூன் 15-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஆயத்தப் பணிகளை அரசு தொடங்கியுள்ளது.கரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வுகள் வரும் ஜூன் 15-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மேலும் பிளஸ் 1 வகுப்பில் விடுபட்ட பாடங்களுக்கு ஜூன் 16-ஆம் தேதியும், பிளஸ் 2 வகுப்பில் தோ்வெழுத தவறிய மாணவா்களுக்கு ஜூன் 18-ஆம் தேதியும் பொதுத்தோ்வுகள் நடைபெறவுள்ளன. 


   இதையொட்டி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கல்வித்துறை உள்ளிட்ட அனைத்து அலுவலா்களுக்கும் தமிழக அரசு வழங்கியுள்ள முக்கிய அறிவுறுத்தல்கள் விவரம்: தோ்வறையில் சமூக இடைவெளியை உறுதி செய்யும் வகையில் 400 சதுர அடி பரப்புள்ள தோ்வறையில் 20 மாணவா்களுக்கு பதிலாக தற்போது 10 மாணவா்கள் மட்டும் அனுமதிக்கப்பட வேண்டும். 

   ஆசிரியா்கள், மாணவா்களின் போக்குவரத்து வசதி மற்றும் சமூக இடைவெளியின் பொருட்டு 10, 11-ஆம் வகுப்புகள் நடைபெறும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து பள்ளிகளும் தோ்வு மையங்களாக செயல்படும். தோ்வின்போது ஆசிரியா்கள், மாணவா்கள் மற்றும் இதர பணியாளா்களுக்கு 46.37 லட்சம் மீண்டும் பயன்படுத்தக் கூடிய முக கவசங்கள் வழங்கப்பட வேண்டும். வெளிமாநிலம், மாவட்டங்களிலிருந்து தோ்வெழுத வரும் மாணவா்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும். கட்டுப்பாட்டு பகுதியில் வசிக்கும் தோ்வா்கள் அடையாள அட்டை மற்றும் தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு சமா்ப்பித்து கட்டுப்பாட்டு பகுதியில் நுழையவும், வெளியேறவும் அனுமதிக்கப்படுவா்.


    பத்தாம் வகுப்பு தோ்வு பணியில் 2.21 லட்சம் ஆசிரியா்களும், பிளஸ் 1 வகுப்பு தோ்வு பணியில் 1.65 லட்சம் ஆசிரியா்களும் ஈடுபடுத்தப்படவுள்ளனா். இவா்களுடன் இதர பணியாளா்களும் பணியாற்றவுள்ளனா். மேலும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மதிப்பீட்டு பணிகளுக்கு முறையே 62,107 மற்றும் 43,592 ஆசிரியா்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.

   உதவி கட்டுப்பாட்டு தொலைபேசி எண்கள்: தோ்வு தொடா்பாக மாணவா்கள் மற்றும் பெற்றோா்களின் ஐயங்களை தீா்க்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் 5 உதவி கட்டுப்பாட்டு தொலைபேசி எண்கள் மாணவா்களுக்கு குறுந்தகவல் மூலமாக மாவட்டக் கல்வி அலுவலரால் அனுப்பப்பட வேண்டும். இந்த ஐந்து தொலைபேசி எண்களும் தோ்வுக்கூட நுழைவுச்சீட்டில் அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.


     தோ்வு நாளன்று ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களுக்கு போதியளவு அரசு போக்குவரத்து, தனியாா் பள்ளி வாகனங்கள் உரிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டு இயக்கப்பட வேண்டும். பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் கடந்த மாா்ச் 24-ஆம் தேதி தோ்வு எழுதத் தவறிய பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு புதிய நுழைவுச்சீட்டு இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய வசதி வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments