PGTRB - போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் காலக்கெடு நீட்டிப்பு

PGTRB - போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் காலக்கெடு நீட்டிப்பு.
  அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பும் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

    டிஆர்பி எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்‌, உடற்கல்வி இயக்குநர்‌ நிலை - 1 மற்றும்‌ கணினி பயிற்றுநர்‌ நிலை - 1 ஆகிய பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு கணினி வழியில் நவம்பர் 13, 14, 15 ஆகிய தேதிகளில் நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்பப் பதிவு செப்.18 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

  இந்தத் தேர்வு உட்பட அரசுப் பள்ளி ஆசிரியர் பணி நியமனங்களுக்கு முதல்முறையாக வயது வரம்பு கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது. இதன்படி பொதுப்பிரிவினருக்கு 40, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 45 என வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த, 40 வயதைக் கடந்த பி.எட். பட்டதாரிகள் வயது வரம்பை தளர்த்தக் கோரி போராட்டங்களில் ஈடுபட்டதுடன், முதல்வர், அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.

  இந்நிலையில், ஆசிரியர் நேரடி நியமனம் தொடர்பான வயது உச்சவரம்பு பொதுப்பிரிவினருக்கு 40-ல் இருந்து 45 ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 45-ல் இருந்து 50 ஆகவும் உயர்த்தப்பட்டது. இவ்வாறு உயர்த்தப்படும் உச்ச வரம்பு 31.12.2022 வரை சிறப்பு நிகழ்வாக ஒருமுறை மட்டுமே நிர்ணயிக்கப்படுவதாகவும் அதுவரை வெளியிடப்படும் ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான அறிவிக்கைகளுக்கு இது பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டது.

  முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் அக். 31-ம் தேதியாக இருந்தது. விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளதால், விண்ணப்ப கால அவகாசம் நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நவம்பர் 9-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

  இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ’’ஆசிரியர்களின்‌ நேரடி நியமனத்திற்கு பணிநாடுநர்களுக்கான உச்ச வயது வரம்பினை உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளதால்‌, உச்ச வயது வரம்பினைச் சார்ந்து மென்பொருளில்‌ மாற்றம்‌ செய்ய வேண்டியுள்ளதாலும்‌ மேலும்‌ பணிநாடுநர்கள்‌ இணைய வழியில்‌ விண்ணப்பிப்பதற்கான உரிய கால அவகாசம்‌ அளிக்க வேண்டியுள்ளதாலும்‌ முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர்‌ நிலை - 1 மற்றும்‌ கணினி பயிற்றுநர்‌ நிலை - 1 ஆகிய பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள்‌ பெறுவதற்கான கடைசித் தேதி 31.10.2021ல் இருந்து 09.11.2021 மாலை 5.00 மணி வரை நீட்டிக்கப்படுகிறது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments