அண்ணா பல்கலை தேர்வில் 70 சதவீதம் பேர் பெயில்

அண்ணா பல்கலை தேர்வில் 70 சதவீதம் பேர் பெயில்
அண்ணா பல்கலையின் 'ஆன்லைன்' தேர்வில் 70 சதவீதம் பேர் தேர்ச்சி பெறாததால் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். தேர்ச்சி மதிப்பெண்ணை அண்ணா பல்கலை சரியாக வெளியிடாததால் மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

சென்னையில் உள்ள அண்ணா பல்கலையின் இணைப்பில் 500க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் மற்றும் ஆர்கிடெக்ட் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவற்றில் தன்னாட்சி அல்லாத கல்லுாரிகளின் மாணவர்களுக்கு அண்ணா பல்கலையின் தேர்வு துறை சார்பில் தேர்வு நடத்தி சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் 2020 டிசம்பரில் நடத்த வேண்டிய தேர்வுகள் இந்த ஆண்டு பிப்ரவரியில் ஆன்லைன் வழியில் நடத்தப்பட்டன. 'ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ்' முறையான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் கேமராவால் கண்காணித்து தேர்வு நடத்தப்பட்டது. எழுத்து தேர்வுக்கு 80 சதவீதமும்; நேர்முக பதில் அளித்தலுக்கு 20 சதவீதமும் மதிப்பெண் வழங்கப்படுகிறது.

ஆன்லைன் தேர்வு நடத்தும் முறைகளில் மாணவர்கள் தரப்பில் ஏற்கனவே புகார்கள் இருந்த நிலையில் நேற்று முன்தினம் தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் தற்போதைய பாடத் திட்டம் மற்றும் 'அரியர்' பாடங்களுக்கு தேர்வு எழுதிய 3.5 லட்சம் பேரில் 70 சதவீதம் பேர் தேர்ச்சி பெறவில்லை; 30 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்ச்சி பெறாதவர்களுக்கு தேர்வில் முறைகேடு, 'காப்பி' அடித்தல் கேமராவை பார்த்து எழுதவில்லை என ௨0க்கும் மேற்பட்ட காரணங்களை குறிப்பிட்டுள்ளனர். இதன் காரணமாக அண்ணா பல்கலையின் இன்ஜினியரிங் மாணவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்த தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் எவ்வளவு என்பதையும் பல்கலை நிர்வாகம் குறிப்பிடவில்லை. அதனால் 'பல்கலையின் தேர்வு முறையை மாற்ற வேண்டும்; தற்போதைய தேர்வு முடிவை மறுபரிசீலினை செய்ய வேண்டும்' என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments