கல்லூரி இறுதி ஆண்டு தேர்வு நடத்துவதற்கு நாடு முழுவதும் மாணவர்கள் கடும் எதிர்ப்பு

     பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வு நடத்துவதற்கு நாடு முழுவதும் மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் ஆன்லைனில் மனு அனுப்பி உள்ளனர். பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வுகள் இம்மாதம் நடைபெறுவதாக இருந்தது. கொரோனா தாக்கம் காரணமாக, இந்த தேர்வு ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், செப்டம்பர் மாத இறுதிக்குள் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நேற்று முன்தினம் அறிவித்தது.


      இந்நிலையில், இறுதி ஆண்டு தேர்வை ரத்து செய்யாததற்கு நாடு முழுவதும் பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆன்லைனில் மனுக்கள் தாக்கல் செய்வதுடன் ‘டுவிட்டர்‘ பக்கத்தில், ‘ஸ்டூடண்ட்ஸ் லைவ்ஸ் மேட்டர்‘ என்ற ஹேஷ்டேக் மூலம் பிரசாரம் செய்து வருகிறார்கள். 46 ஆயிரம் மாணவர்கள் கையெழுத்திட்ட ஒரு ஆன்லைன் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-


     இறுதி ஆண்டு மாணவர்களாகிய நாங்கள், அரசின் பரிசோதனை கருவிகள் அல்ல. நாங்கள் தேர்வை பார்த்து பயப்படவில்லை. கொரோனா, சமூக பரவலாகி விடுமோ என்றுதான் அஞ்சுகிறோம். தேர்வு அறையில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து விடலாம். ஆனால், பல்கலைக்கழக விடுதிகளில் நாங்கள் பொதுவான குளியலறை, கழிப்பறை மற்றும் உணவுக்கூடத்தை பயன்படுத்தும்போது எப்படி சமூக இடைவெளியை பின்பற்றுவது? இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.


     இதுபோல், 75 ஆயிரம் மாணவர்கள் மற்றொரு ஆன்லைன் மனுவில் கையெழுத்திட்டுள்ளனர். டெல்லி பல்கலைக்கழகத்தின் ஹன்ஸ்ராஜ் கல்லூரி ஆசிரியர் மித்துராஜ் துசியா என்பவரும் தேர்வு நடத்துவதை டுவிட்டரில் விமர்சித்துள்ளார். முந்தைய தேர்வுகள் அடிப்படையில் தேர்ச்சி வழங்கலாம் என்று சிலர் யோசனை தெரிவித்துள்ளனர்.


Post a Comment

0 Comments