பிளஸ்1 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு?

பிளஸ்1 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு?

மார்ச் மாதம் நடந்த பிளஸ் 1 தேர்வு முடிவுகள் நாளை காலை வெளியாகும் என்றும், அத்துடன் விடுபட்ட தேர்வுக்கான முடிவுகளும் வெளியாகும் என்றும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 4ம் தேதி முதல் 26ம் தேதி வரை பிளஸ் 1 தேர்வுகள் நடந்தன. இந்த தேர்வில் தமிழகம் புதுச்சேரியை சேர்ந்த 7,400 பள்ளிகளில் படித்த 8 லட்சத்து 26 ஆயிரத்து 119 பேர் எழுதினர். இது தவிர தனித் தேர்வர்கள் 6 ஆயிரத்து 356 பேர் எழுதினர். அறிவியல் பாடத் தொகுதியின் கீழ் 4,67,785, வணிகவியல் பாடத் தொகுதியின் கீழ் 2,88,922, கலைப் பிரிவின் கீழ் 15,871 பேரும், தொழில்கல்வி பிரிவின் கீழ் 53,541 பேரும் எழுதினர். இந்நிலையில் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படுகிறது.இது குறித்து தேர்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் மார்ச் மாதம் நடந்த பிளஸ் 1 தேர்வு மற்றும் ஜூலை 27ம் தேதி நடந்த பிளஸ் 2 மறு தேர்வுக்கான முடிவுகள் நாளை (31ம் தேதி) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும். மாணவர்கள் தங்கள் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதி, மாதம் வருடம் ஆகியவற்றை இணைய தளத்தில் பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். இதற்காக, www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணைய தளங்களில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் அவர்கள் படித்த பள்ளிகளில் கொடுத்துள்ள செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தி மூலம் முடிவுகள் அறிவிக்கப்படும். தனித் தேர்வர்களுக்கும் செல்போனில் முடிவுகள் அறிவிக்கப்படும். விடைத்தாள் மற்றும் மறு கூட்டல் விண்ணப்ப தேதி, இணைய தளம் மூலம் மதிப்பெண் பட்டியல் பதிவிறக்க தேதி பின்னர் அறிவிக்கப்படும்.* சென்னை, புதுச்சேரியில் எப்படி?
தமிழகத்தில் 2019ம் ஆண்டு பிளஸ் 1 தேர்வில் சில பாடங்களில் தேர்ச்சி பெறாமல் தற்போது பிளஸ் 2 வகுப்பில் படித்த 50,650 பேர் மேற்கண்ட பிளஸ் 1 தேர்வின் போது எழுதினர். சென்னையில் 411 பள்ளிகளை சேர்ந்த 46,779 மாணவியர் தேர்வு எழுதினர். புதுச்சேரியில் 14,779 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர்.

* ஆப்சென்ட் மாணவர்கள்
தமிழகத்தில் மார்ச் மாதம் 25ம் தேதி முதல் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் 24ம் தேதி நடந்த பிளஸ் 2 தேர்வுக்கு வராமல் விடுபட்ட மாணவர்களுக்கு ஜூலை 27ம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. இந்நிலையில் மேற்கண்ட தேர்வுகளுக்கான முடிவுகளை நாளை வெளியிட உள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

Post a comment

0 Comments