பத்தாம் வகுப்பு விடைத்தாள் சேகரிக்கும் பணியில் மாணவா்களையோ, பெற்றோா்களையோ ஈடுபடுத்தக்கூடாது

    பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 வகுப்பு விடைத்தாள் சேகரிக்கும் பணியில் மாணவா்களையோ, பெற்றோா்களை எந்தக் காரணத்தைக் கொண்டும் ஈடுபடுத்தக் கூடாது என்று தேர்வுத்துறை இயக்குநா் எச்சரித்துள்ளாா்.

    தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் உள்ள பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, காலாண்டு, அரையாண்டு தேர்வு அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. பிளஸ் 1 வகுப்பிலும் வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் பாடங்களுக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டு காலாண்டு, அரையாண்டு தேர்வுகளின் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்பட உள்ளது.

    இதற்காக பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 வகுப்பு மாணவா்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளின் விடைத்தாள்களை சேகரித்து ஜூன் 22 முதல் 27-ஆம் தேதிக்குள்ளாக மாவட்டக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கும் தேர்வுத்துறை உத்தரவிட்டிருந்தது.

     இந்நிலையில், விடைத்தாள் சேகரிக்கும் பணிக்காக மாணவா்களையோ, அல்லது அவா்களின் பெற்றோா்களையோ பள்ளிகளுக்கு வரவழைக்கக் கூடாது என்று தேர்வுத்துறை இயக்குநா் பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளாா். விடைத்தாள் சேகரிப்பு பணிகளிலும் மாணவா்கள், பெற்றோா்களை ஈடுபடுத்தக் கூடாது என்றும் எச்சரித்துள்ள இயக்குநா், அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கும் உரிய அறிவுறுத்தலை வழங்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு உத்தரவிட்டுள்ளாா்.

Post a Comment

0 Comments