காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளை விருப்பம் போல நடத்தி மதிப்பெண் வழங்கும் தனியார் பள்ளிகள்

   பொதுத்தேர்வு மதிப்பெண்களை கணக்கிட காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு விடைத்தாள்களை அனுப்ப வேண்டும் என்று அரசு தேர்வுகள் துறை உத்தரவிட்டுள்ளதே குழப்பத்திற்கு காரணம் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் நடத்தப்படாமல் விடுப்பட்டு போன 11ம் வகுப்பு ஒரு பாடத்திற்கான பொதுத்தேர்வு ஆகியவற்றை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

       இதனையடுத்துப் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்த நிலையில் அரசு தேர்வுகள் துறை சார்பில் நேற்று சுற்றறிக்கை ஒன்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டது. அதில் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு விடைத்தாள்கள் மற்றும் மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தேர்வுத் துறையின் இந்த அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. அரசு பள்ளிகளை பொறுத்தவரை காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் அரசு ஏற்படுத்தியுள்ள கல்வித் தகவல் மேலாண்மை இணைய பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இதனால் அரசு பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு மற்றும் காலாண்டு மதிப்பெண்களை கணக்கிட்டு தேர்ச்சி வழங்குவதில் சிக்கல் இல்லை ...ஆனால் தனியார் பள்ளி மாணவர்களின் மதிப்பெண் விவரங்கள் அரசிடம் இல்லை. இந்நிலையில் அரசுத் தேர்வுகள் துறை விடைத்தாள்களை ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சில தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தற்போது அவசர அவசரமாக காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளை நடத்தி விருப்பம்போல மதிப்பெண்களை வாரி வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

      மேலும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளிடமிருந்து காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு விடைத்தாள்களை அரசு தேர்வுகள் துறை கேட்டிருப்பது தேவையற்ற நடவடிக்கை என்றும் விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றது. அவ்வாறு விடைத்தாள்களை பெற்றால் ஒன்றேகால் கோடி விடைத்தாள்களை பெற வேண்டியிருக்கும் என்றும் அதனால் ஒரு பயனும் இல்லை என்பதும் தேர்வுத் துறையின் மீதான விமர்சனமாக உள்ளது.

Post a Comment

0 Comments