3 மாத பிஎஃப் தொகையை மத்திய அரசே செலுத்தும் - நிர்மலா சீதாராமன்

   நிறுவன ஊழியர்களின் மேலும் 3 மாத பிஎஃப் தொகையை மத்திய அரசே செலுத்தும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி நேற்று அறிவித்த ரூ.20 லட்சம் கோடிக்கான திட்டங்களின் விவரங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார். அதன்படி, சிறு, குறு தொழில் வரையறை மாற்றியமைக்கப்படுவதாகத் தெரிவித்தார். இந்த அறிவிப்பில், சிறுதொழில் நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை விரிவாக்க புதிய கடன் வசதி அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடனை 4 ஆண்டுகளில் திருப்பி அளிக்கலாம் என்றும், முதல் ஓராண்டுக்குக் கடன் தவணை வசூலிக்கப்படாது எனவும் கூறப்பட்டுள்ளது.


    அத்துடன் குறுந்தொழில்களுக்கான முதலீட்டு வரம்பு ரூ.25 லட்சத்திலிருந்து ரூ.1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுதவிர வாரக்கடன்களில் உள்ள நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வரம்பு ரூ.10 கோடியிலிருந்து ரூ.20 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.


   புதிய கடன் வசதியைப் பெறச் சொத்து பத்திரங்கள் போன்ற பிணை எதையும் தரத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்காக ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாத பிஃப் தொகையை அரசு செலுத்தும் என்றும், இதன்மூலம் 3.67 லட்சம் நிறுவனங்கள் பலன்பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், ரூ.200 கோடிக்குக் குறைவான அரசு டெண்டர்கள் இனி சர்வதேச அளவில் வெளியிடப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் வீட்டுக் கடன் வசதி நிறுவனங்களுக்கு ரூ.30,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments