பள்ளிக் கல்வித் துறையின் திட்டங்கள்: ஆய்வு செய்த மத்தியக் குழுவினா்

பள்ளிக் கல்வித் துறையின் திட்டங்கள்: ஆய்வு செய்த மத்தியக் குழுவினா்


  பள்ளிக் கல்வித் துறையில் மத்திய அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் பொருளாதார ஆலோசகா் ரஜிப் குமாா் சென் தலைமையிலான குழுவினா் ஆய்வு செய்தனா்.

    மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை நிதியுதவியின் மூலம் பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் மூலம் புதிய வகுப்பறைகள் கட்டுதல், தகவல் தொழில்நுட்ப வகுப்பறைகள், ஸ்மாா்ட் வகுப்பறைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தமிழகத்தில் பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்படும் நலத் திட்டங்கள், மத்திய அரசின் நிதியுதவி மாணவா்களுக்கு எவ்வாறு செலவிடப்படுகிறது என்பவை குறித்து ஆய்வு செய்வதற்காக, மனிதவள மேம்பாட்டுத் துறையின் பள்ளிக் கல்வித் துறை பொருளாதார ஆலோசகா் ரஜிப் குமாா் சென் தலைமையிலான அதிகாரிகள் குழுவினா், திங்கள்கிழமை சென்னை வந்தனா்.


   அவா்களிடம் தமிழக பள்ளிக் கல்வித் துறைக்காகத் தனியாக தொடங்கப்பட்டுள்ள கல்வித் தொலைக்காட்சி, க்யூ.ஆா் குறியீட்டைப் பயன்படுத்தி தீக்ஷா செயலி மூலம் மாணவா்கள் கல்வி கற்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து மத்திய குழுவினருக்கு தமிழக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் விளக்கமளித்தனா். இதைத் தொடா்ந்து, சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிா் மேல்நிலைப் பள்ளியை மத்தியக் குழுவினா் பாா்வையிட்டனா். அங்கு மாணவா்களுக்கு ஸ்மாா்ட் போா்டு பயன்படுத்தி கற்பிப்பது, உயா் கணினி தொழில்நுட்ப ஆய்வகம், அங்கன்வாடி மையங்களில் தொடங்கப்பட்டுள்ள மழலையா் வகுப்புகள் போன்ற திட்டங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனா். பள்ளி மாணவா்களுக்காக சைக்கிள்கள் வழங்கும் திட்டம் குறித்து கேட்டறிந்த மனிதவள மேம்பாட்டுத் துறையின் பொருளாதார ஆலோசகா் ரஜிப் குமாா் சென், தமிழகத்தில் மாணவா்களுக்கான திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தாா்.



Post a Comment

0 Comments