குரூப் -4 முறைகேடு விவகாரத்தில் திடீர் திருப்பமாக முதல் 35 இடங்களை பெற்ற அனைவரும் விசாரணைக்கு அழைப்பு

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 பதவியில் (2018-19, 2019-20ம் ஆண்டுக்கானது) அடங்கிய கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ), இளநிலை உதவியாளர், வரிதண்டலர், சுருக்கெழுத்து தட்டச்சர், நில அளவர், வரைவாளர் பணிகளில் காலியாக இருந்த 9398 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை கடந்த ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி நடத்தியது. இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 16 லட்சத்து 29 ஆயிரத்து 865 பேர் எழுதினர். தொடர்ந்து நவம்பர் 12ம் தேதி தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.

     இதில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய 40 பேர் முதல் நூறு இடங்களுக்குள் வந்தனர். இவர்கள் அனைவரும் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. மேலும் உள்ளூரை சேர்ந்த பலரும் தேர்வு எழுதியிருந்தனர். அவர்களில் தேர்வு பெற்றவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்ததும் தெரியவந்தது. இதன் மூலம் தேர்வில் பெரிய அளவில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவம் கஷ்டப்பட்டு தேர்வு எழுதியவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது சம்பந்தமாக உரிய விசாரணை நடத்தி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்வு எழுதிய மாணவர்கள், அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வந்தனர்.

   இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்த மையங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களில் ஒட்டுமொத்த தரவரிசை அடிப்படையில் முதல் 1000 இடங்களில் 40 பேரும், முதல் 100 இடங்களில் 35 பேரும் உள்ளனர். இந்த குற்றச்சாட்டு குறித்து இந்த விண்ணப்பதாரர்களின் விடைத்தாள்கள், ஆவணங்கள் மட்டுமின்றி இத்தேர்வுடன் தொடர்புடைய பிற ஆவணங்கள் அனைத்தும் மிகுந்த கவனமுடன் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு வருகின்றன.

     இதுகுறித்து எவ்வித பாரபட்சமுமின்றி மேலும் விசாரணை செய்யப்பட்டு விரைவில் உண்மை நிலை அறிவிக்கப்படும். விசாரணையில் தவறு ஏதேனும் கண்டறியப்பட்டால் அதற்குக் காரணமான நபர்கள் மீது சட்டப்படி மிகக்கடுமையான குற்ற நடவடிக்கை எடுக்க ஆவன செய்யப்படும்.எனவே தேர்வாணையத்தின் நடவடிக்கைகள் மீது நம்பிக்கை கொண்டு அமைதி காக்குமாறு தேர்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

      இ்ந்நிலையில், குரூப் -4 முறைகேடு விவகாரத்தில் திடீர் திருப்பமாக முதல் 35 இடங்களை பெற்ற அனைவரையும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments